பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தல், கடந்தமுறை போன்று இந்த முறையும், 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. அதன்படி, தமிழ்நாட்டுக்கு முதல் கட்டத்திலேயே வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டை தவிர 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.


வெளியானது இறுதி வேட்பாளர் பட்டியல்:


முதற்கட்ட தேர்தல் நடக்கும் 102 தொகுதிகளில் போட்டியிட விரும்புபோர் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான அவகாசம் கடந்த 27ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அடுத்த நாளான 28ஆம் தேதியன்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றன.


தமிழ்நாட்டை பொறுத்தவரையில், பல்வேறு இடங்களில் வாக்குவாதங்கள், குழப்பங்களுக்கு மத்தியில் பல முக்கிய வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. சில நூறு வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.  இதையடுத்து தேர்தல் ஆணைய அறிக்கையின்படி, வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் இன்று முடிந்த நிலையில், தொகுதிவாரியாக இறுதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.


அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக, கரூர் மக்களவை தொகுதியில் 54 பேர் களம் காண்கின்றனர். குறைந்தபட்சமாக, நாகப்பட்டினம் தொகுதியில் 9 பேர் போட்டியிடுகின்றனர்.


ஒரு தொகுதியில் கூட போட்டியிடாத திருநர் சமூகத்தினர்:


வட சென்னையில் 35 வேட்பாளர்களும் தென் சென்னையில் 41 வேட்பாளர்களும் மத்திய சென்னையில் 31 பேர் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.


தமிழ்நாட்டில் மொத்தமாக 874 ஆண்களும் 76 பெண்களும் போட்டியிடுகின்றனர். ஆனால், ஒரு திருநர் கூட போட்டியிடவில்லை. கடந்த 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில், இரண்டு தொகுதிகளில் திருநர்கள் போட்டியிட்டனர்.


சென்னை மயிலாப்பூர் சட்டப்பேரவை தொகுதியில் ஒருவர் திருநரும் மதுரை தெற்கு தொகுதியில் ஒரு திருநரும் போட்டியிட்டனர். சமூக நீதியில் இந்தியாவுக்கே முன்னுதாரணமாக இருக்கும் தமிழ்நாட்டில் இந்த முறை திருநர் சமூகத்தை சேர்ந்த ஒருவர் கூட போட்டியிடாதது பல்வேறு விதமான கேள்விகளுக்கு வழிவகுக்கிறது.


அனைவரும் சமம் என்ற மகத்தான கொள்கையை அடிப்படையாக கொண்ட அரசியல் சாசனம் சாமானியன் கூட, இந்தியாவின் உச்சபட்ச பதவியை அடைவதற்கான உரிமையை நமக்கு வழங்கியுள்ளது. அரசியல் ஜனநாயகத்தை தாண்டி சமூக ஜனநாயகத்தை இலக்காக கொண்டு இயங்கி வருகிறது நமது அரசியல் சாசனம்.


தேர்தலில் வெற்றி, தோல்வியை தாண்டி பங்கேற்பதே முக்கிய அரசியல் நடவடிக்கையாகும். இப்படியிருக்க, தேர்தலில் போட்டியிட திருநர் சமூகத்தை சேர்ந்த ஒருவர் கூட முன்வரவில்லை. எனவே, அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கும் நோக்கில் தமிழ்நாட்டில் திருநர் சமூகத்திற்கு இடஒதுக்கீடு முறையில் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.  


இதையும் படிக்க: "சமைக்கத்தான் தெரியும்" பெண் வேட்பாளர் குறித்து சர்ச்சை கருத்து! காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு சாய்னா நேவால் பதிலடி!