கர்நாடக மாநிலம் தாவங்கரே தொகுதியில் நடக்க உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலில்  பாஜக வேட்பாளராக களமிறங்கும் காயத்திரி சித்தேஸ்வரா குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான சாமனூர் சிவசங்கரப்பா தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.


பாஜக வேட்பாளர் குறித்து சர்ச்சை:


காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் பேசிய சாமனூர் சிவசங்கரப்பா, "தேர்தலில் வெற்றி பெற்று மோடிக்காக தாமரையை மலர வைக்க வேண்டும் என அவர் (காயத்திரி சித்தேஸ்வரா) நினைத்தது உங்களுக்கு தெரியும். முதலில் தாவங்கரே தொகுதியின் பிரச்சினைகளை அவர்கள் புரிந்து கொள்ளட்டும்.


நாங்கள் (காங்கிரஸ்) இப்பகுதியில் வளர்ச்சிப் பணிகளை செய்துள்ளோம். எப்படி பேச வேண்டும் என்பதை தாண்டி, அவர்களுக்கு சமையல் அறையில் சமைக்க மட்டுமே தெரியும். பொதுமக்கள் முன்னிலையில் பேசுவதற்கு எதிர்க்கட்சிக்கு சக்தி இல்லை" எனக் கூறினார்.


பெண் வேட்பாளரை காங்கிரஸ் மூத்த தலைவர் அவமதித்துவிட்டதாக எதிர்ப்பு கிளம்பியது. அவரை விமர்சித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், காங்கிரஸ் எம்எல்ஏவின் கருத்துக்கு பாஜகவை சேர்ந்தவரும், பிரபல பேட்மிண்டன் வீராங்கனையுமான சாய்னா நேவால் பதிலடி கொடுத்துள்ளார்.


காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு சாய்னா நேவால் பதிலடி:


இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, "பெண்கள் சமையலறையில் மட்டுமே இருக்க வேண்டும். இதுவே கர்நாடக முன்னணி தலைவர் சாமனூர் சிவசங்கரப்பா கூறியது. பெண்களின் முன்னேற்றம் குறித்து பேசும் ஒரு கட்சி, தாவங்கரே தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் காயத்திரி சித்தேஸ்வராவை பாலின ரீதியாக அவமதித்திருக்கிறது. இதை எதிர்பார்க்கவில்லை.


மைதானத்தில் பாரதத்திற்காக நான் பதக்கங்களை வென்றபோது, ​​நான் என்ன செய்திருக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி விரும்பியிருக்கும்? எல்லா பெண்களும், தாங்கள் விரும்பும் துறையில் சாதிக்க வேண்டும் என்று கனவு காணும் போது ஏன் அப்படிச் சொல்ல வேண்டும். ஒரு புறம் பெண் சக்திக்கு தலைவணங்குகிறார்கள். நமது பிரதமர் மோடி தலைமையில் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. 


மற்றொரு புறம், பெண்களை அவமதிக்கிறார்கள். பெண்கள் மீது வன்மத்தை கக்குகிறார்கள். உண்மையிலேயே வருத்தமளிக்கிறது" என பதிவிட்டுள்ளார்.