நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் 19 நாள்களே உள்ளது. 7 கட்டங்களாக நடைபெறும் மக்களவை தேர்தல் அடுத்த மாதம் 19ஆம் தேதியுடன் தொடங்குகிறது. இப்படிப்பட்ட பரபரப்பான அரசியல் சூழலில், எதிர்க்கட்சி தலைவர்கள் கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது.
கைதான முதலமைச்சர்களின் மனைவி சந்திப்பு:
குறிப்பாக, கடந்த 2 மாதங்களில் ஜார்க்கண்ட், டெல்லி என இரண்டு மாநில முதலமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2014ஆம் ஆண்டு, மத்தியில் பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்தே மத்திய விசாரணை அமைப்புகளை கொண்டு எதிர்க்கட்சி தலைவர்கள் மிரட்டப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
கடந்த 2 மாதங்களில் ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவி வகித்து வந்த ஹேமந்த் சோரன், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டனர். தேர்தல் நெருங்கும் சூழலில், இந்த இரண்டு கைதுகளும் தேசிய அரசியலில் பரபரப்பை கிளப்பி வருகின்றன.
இந்த நிலையில், கைதான இரண்டு முதலமைச்சர்களின் மனைவியும் டெல்லியில் நேரில் சந்தித்து பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால், ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.
பரபரத்த டெல்லி:
இந்த சந்திப்பின்போது, ஒருவரை ஒருவர் வரவேற்று, கட்டி அணைத்து அன்பை பறிமாறி கொள்ளும் காட்சிகள் புகைப்படங்களாக வெளியாகியுள்ளன. ஆம் ஆத்மி கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
"அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஹேமந்த் சோரன் ஆகியோர் சர்வாதிகார அரசால் கைது செய்யப்பட்டாலும், அவர்களின் மனைவி அந்தந்த மாநில மக்களுடன் இணைந்து வலுவாக போராடுகிறார்கள்" என ஆம் ஆத்மி கட்சி எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளது.
சுனிதா கெஜ்ரிவாலுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவு தெரிவித்து பேசிய கல்பனா சோரன், "ஜார்கண்டில் நடந்த அதே சம்பவம் டெல்லியிலும் நடந்துள்ளது. எனது கணவர் ஹேமந்த் சோரனை கைது செய்த பிறகு, அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுனிதா கெஜ்ரிவாலுடன் ஜார்க்கண்ட் மாநிலமே துணை நிற்கிறது. நாங்கள் ஒருவருக்கொருவர் வலியை பகிர்ந்து கொண்டோம். மேலும் இந்த போராட்டத்தை ஒன்றாக கொண்டு செல்வோம் என முடிவு செய்துள்ளோம்" என்றார்.
ஹேமந்த் சோரனை போல் அரவிந்த் கெஜ்ரிவாலும் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார் என தகவல் வெளியான வண்ணம் உள்ளது. டெல்லி முதலமைச்சர் பதவியானது அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவாலுக்கு தரப்படலாம் என ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.