தை திருநாளான பொங்கலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசில் என்னென்ன பொருட்களை வழங்குவது என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியக்கருப்பன் மற்றும் மூத்த அமைச்சரான துரைமுருகனோடு இன்று ஆலோசனை நடைபெற்றது.
பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பு எப்போது ?
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு என்னென்ன பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் வழங்குவது என்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் அந்த தொகுப்பை ஜனவரி முதல் வாரத்தில் தலைமைச்செயலகத்தில் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார் என்றும் தகவல் கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பு
திமுக அரசு பொறுப்பேற்றதும் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் முழு கரும்போடு சேர்த்து பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, ரவை, கோதுமை, உப்பு மற்றும் மஞ்சள் பை ஆகிய 21 பொருட்கள் வழங்கப்பட்டன. ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரொக்கத் தொகை வழங்கப்படவில்லை. அரசின் நிதி நிலையை கருத்தில்க்கொண்டு கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்கத் தொகை கொடுக்கப்படவில்லை என்று ஆளுங்கட்சியினர் சொன்னாலும், அதனை அதிமுகவினர் கடுமையாக விமர்சித்தனர்.
அதோடு, கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் பல்வேறு பொருட்கள் தரமில்லாமல் இருந்ததாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டினர். இது சட்டப்பேரவை வரை எதிரொலித்ததால் பொங்கல் சிறப்பு தொகுப்பை விநியோகித்த சில நிறுவனங்களை கருப்பு பட்டியலுக்குள் கொண்டுவந்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த ஆண்டும் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வந்துவிடக் கூடாது என்று தமிழக அரசின் உணவுத் துறையும் கூட்டுறவுத் துறையும் மிக கவனமாக செயல்பட்டு வருகின்றனர். அதனடிபடையிலேயே இன்று முதல்வர் தலைமையில் துறை அமைச்சர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
ஏற்கனவே முடிவு ; எப்படி விநியோகம் என்பது பற்றியே விவாதிப்பு
முதல்வரின் இந்த ஆலோசனைக்கு பிறகு பொங்கல் பரிசு தொகுப்பில் இடம்பெற வேண்டிய பொருட்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டாலும் ஏற்கனவே என்னென்ன பொருட்கள் பொங்கல் பரிசு தொகுப்பில் கொடுக்க வேண்டும் என்பதை தமிழக அரசு முடிவு செய்துவிட்டது என்றும் அதனை எப்படி பிரச்னையின்றி விநியோகம் செய்ய வேண்டும் என்பது குறித்துதான் இன்று முதல்வர் அமைச்சர்களுடன் விவாதிக்கப்போகிறார் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
21 பொருட்கள் இல்லை
நமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த முறை பொங்கல் பரிசு தொகுப்பில் கடந்த ஆண்டு வழங்கியதுபோல 21 பொருட்களை கொடுக்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிக பொருட்களை ஒரே நேரத்தில் விநியோகம் செய்யும்போது ஏற்படும் சிக்கலையும் பிரச்னையையும் தவிர்க்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த முறை என்னென்ன பொருட்கள் ?
அதனால், இந்த முறை பொங்கல் தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை ஆகியவற்றை மட்டும் தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகுப்பு என்று அச்சடிக்கப்பட்ட மஞ்சள் பையில் வைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
ரொக்கம் உண்டா ?
கடந்த அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசு தொகுப்போடு ரூ.2,500/- ரொக்கம் தரப்பட்ட நிலையில், திமுக ஆட்சியிலும் அது தொடரும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு ரொக்க பரிசை தவிர்த்த திமுக அரசு 21 பொருட்களை வழங்கியது.
இந்த முறை மக்களின் கடந்த ஆண்டு எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் பொங்கல் பரிசு பொருளோடு ரூ.1,000/- ரொக்க பரிசு வழங்கவும் திமுக அரசு முடிவுவெடுத்துள்ளது நமக்கு தகவல் கிடைத்திருக்கிறது
ரொக்கம் கைகளிலோ வங்கி மூலமா ?
பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்கம் வழங்குவது முடிவானதால்தான் ரேஷன் அட்டைகளோடு வங்கிக் கணக்கை இணைக்கச் சொல்லியும் வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் புதிய கணக்கு தொடங்க சொல்லியும் தமிழ்நாடு அரசு வலியுறுத்தியது. எனவே, இந்த முறை பொங்கல் பரிசோடு சேர்த்து ரொக்கம் வழங்கப்படுவது உறுதியாகியுள்ளது.
வங்கிக் கணக்கு தொடங்கப்படாதவர்களுக்கு அல்லது வங்கிக் கணக்கை வைத்துக்கொள்ளத் தெரியாத முதியர்களுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் மூலமாகவே ரொக்கத்தை வழங்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
கரும்பு இல்லை
அதிமுக ஆட்சியிலும் கடந்த ஆண்டு திமுக அரசு கொடுத்த பொங்கல் தொகுப்பிலும் முழு கரும்பு ஒன்று இடம் பெற்ற நிலையில், இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு வழங்கவுள்ள பொங்கல் பரிசில் கரும்பு இடம் பெறாது என தெரிகிறது. பொங்கல் பரிசில் கரும்பு வழங்குவதற்கு கடந்த ஆண்டு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது .ஆனால், இந்த ஆண்டு அப்படி எந்த கொள்முதலும் இதுவரை செய்யாத நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறுவது என்பது கேள்விகுறியாகியுள்ளது.
பொங்கல் என்றால் அது சர்க்கரை பொங்கலும் கரும்புதான் என்றான நிலையில், கரும்பை உடனடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து, பொங்கல் பரிசு தொகுப்பில் சேர்த்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.