கோவை மாவட்டம் அன்னூரில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் டிப்போ மூலம் புதிய தொழில் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த தொழிற் பூங்கா அமைக்க விவசாய நிலங்களைக் கையகப்படுத்தக் கூடாது என விவசாயிகள், அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் கோவையில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது சமூக ஊடகங்களில் அண்ணாமலை கையில் கட்டியிருக்கும் வாட்ச் விலை 3.5 லட்ச ரூபாய் என்ற தகவல் பகிரப்படுவது குறித்த கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு சமீபகாலமாக அரசியலில்வாதிகளின் உடை, பயன்படுத்தும் பொருட்கள் விமர்சனத்திற்குள்ளாகி வருகின்றது. கையில் கட்டி இருக்கும் வாட்ச் 3.5 லட்ச ரூபாய். ரபேல் விமானம் தயாரித்த நிறுவனம் தான் இந்த வாட்ச் செய்தார்கள். ரபேல் விமானத்தின் பாகத்தில் இருந்து மொத்தம் 500 வாட்சுகள் தயாரிக்கப்பட்டுள்ளது. ரபேல் விமானம் ஓட்டக் கூடிய பாக்கியம் கிடைக்கவில்லை. அதான் இந்த வாட்சை கட்டி இருக்கின்றேன். இது 149 வது வாட்ச். என் உயிர் இருக்கும் வரை இந்த வாட்ச் இருக்கும். நான் தேசியவாதி. அதனால் ரபேல் வாட்ச்சை கட்டி இருக்கின்றேன், இது என் தனிப்பட்ட விஷயம் என தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தன் ட்விட்டர் பக்கத்தில் அண்ணாமலையை விமர்சித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "வெறும் 4 ஆட்டுக்குட்டி மட்டுமே சொத்தென சொல்லும் ஆட்டுப்புளுகர் பிரான்ஸ் நிறுவனம் சார்பில் உலகளவில் வெறும் 500 கை கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு 5 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள Rafale watchஐ கட்டியிருக்கிறார். அவர் வாங்கின ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட்டால் எளியவர்களும் வாங்கி மகிழலாம். வெளிநாட்டு வாட்சை கட்டியிருக்கும் தேசியவியாதி, மன்னிக்க தேசியவாதி, ஆடு வளர்த்து சேர்த்து 5 லட்ச ரூபாய் வாட்ச் கட்டும் அளவுக்கு உயர்ந்தது எப்படி? வார்ரூம் வழியாக தொழிலதிபர்களை மிரட்டினால் இப்படியெல்லாம் பணம் கிடைக்குமா? கடிகாரம் வாங்கிய ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட முடியுமா? இல்லை வழக்கம்போல excel sheet ஏமாத்து வேலை தான் வருமா?" என அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வியெழுப்பியிருந்தார்.
இந்நிலையில் இது குறித்து பாஜக மாநில துணைத்தலைவர் நாராயண திருப்பதி ட்விட்டரில் தெரிவித்துள்ள கருத்தில், ஒவ்வொரு நாளும் பல நூறு கோடிகளுக்கு விற்பனை செய்யும் டாஸ்மாக் சரக்குகளுக்கு 'பில்' கொடுக்க துப்பில்லாதவர்கள், கையில் கட்டியிருக்கும் 'வாட்ச்'க்கு பில் கேட்பதா என கேள்வி எழுப்பி ட்வீட் செய்துள்ளார். அண்ணாமலையின் கை கடிகாரம் குறித்து, இருதரப்பினரும் தொடர்ந்து கருத்துக்கள் கூறி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.