புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமி அவர்களும் தனது தரத்தை குறைத்துக்கொண்டு போராட வேண்டும் என நாராயணசாமி கூறுவது கேளிக்கூத்தாக உள்ளதாக அதிமுக செயலாளர் அன்பழகன் கூறியுள்ளார்.


புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் கூறியிருப்பதாவது:


யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பிரச்சனையில் திமுகவும் காங்கிரசும் இரட்டை வேடம் போட்டு மக்களை ஏமாற்றுகின்றனர். முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி விரக்தியின் விளிம்புக்கே சென்று தனது ஆற்றாமையை புலம்பலாக வெளிப்படுத்துகிறார். அவரை பின்தொடர்ந்து திமுக அமைப்பாளர் சிவா அவர்கள் திமுகவின் கையாளாகத தனத்தை மூடி மறைத்து பிரச்சனையை திசை திருப்புகிறார். மத்தியிலும் மாநிலத்திலும் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இருந்த காங்கிரசும் 18 ஆண்டுகாலமாக மத்தியிலும் மாநிலத்திலும் கூட்டணியில் அங்கம் வகித்த திமுகவும் ஏன் தாங்கள் ஆட்சியில் இருந்த போது புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை வழங்கவில்லை.


1998-ல் வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியில் அம்மா அவர்கள் புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அவர்களிடம் வற்புறுத்தியதின் அடிப்படையில் மத்திய அமைச்சரவை புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க கொள்கை முடிவு எடுத்தது. அதன் பிறகு மத்தியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் பாஜகவுடன் திமுக கூட்டணி சேர்ந்தவுடன் மாநில அந்தஸ்து வழங்காமல் கிடப்பில் போட்டனர். 1999-ல் இருந்து 2014-ம் ஆண்டு வரை பாஜக மற்றும் காங்கிசுடன் மத்தியில் கூட்டணியில் இருந்த திமுக புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க என்றைக்காவது மத்திய அரசை வலியுறுத்தியது உண்டா? ஆட்சியில் இருக்கும் போது ஒரு நிலைபாடு, ஆட்சியில் இல்லாத போது வேறு ஒரு நிலைபாடு என்பது திமுகவிற்கு கைவந்த கலையாகும்.


நீட் தேர்வில் புதுச்சேரி மாநில முதலமைச்சர் கருத்து என்ன என்று திமுக கேட்கிறது. தமிழகத்தில் தங்களது ஆட்சி வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம் என இமாலய பொய்சொல்லி ஆட்சிக்கு வந்த திமுக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் நீட் தேர்வு சம்பந்தமாக தமிழகத்தில் என்ன சாதித்து உள்ளார். முதலில் திமுக ஆட்சி செய்யும் தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு புதுச்சேரியில் நீட் தேர்வு சம்பந்தமாக திமுக கேள்வி கேட்பது சரியாக இருக்கும். மக்கள் ஏமாளியாக நினைத்துக்கொண்டு திமுக கபட நாடகத்தை அறங்கேற்றி வருகிறது.


திமுக காங்கிரஸ் கூட்டணியின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மாநில அந்தஸ்துக்காக மத்திய அரசை எதிர்த்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்கள் வீதியில் இறங்கி போராட தயாரா என கேள்வி கேட்கிறார். மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவுடன் புதுச்சேரி மாநிலத்தில் கூட்டணி ஆட்சி நடைபெறும் போது வீதியில் இறங்கி போராட வெண்டிய அவசியம் என்ன? இவரது கட்சியான காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்த போது அந்த அரசை எதிர்த்து மாநில அந்தஸ்துக்காக எத்தனை முறை நாராயணசாமி வீதியில் இறங்கி போராடியுள்ளார். 10 ஆண்டுகாலம் இந்த நாட்டின் பிரதமரோடு இணக்கமாக இருக்கும் பதவியில் இருக்கும் இணை அமைச்சர் பதவியில் நாராயணசாமி இருந்த போது எத்தனை முறை புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என நாட்டு பிரதமரை நாராயணசரி கேட்டிருப்பார். தான் மட்டும் அதிகாரத்தில் இருந்தால் போதும் என்ற எண்ணத்தில் புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்தையே வழங்காமல் தான் சார்ந்த காங்கிரஸ் கட்சியை தடுத்து நிறுத்தியவர் தான் திரு நாராயணசாமி ஆவார்.


மாநில அந்தஸ்துக்காக ஆளும் அரசு வீதியில் இறங்கி போராட வேண்டிய அவசியம் இல்லை. பிரதமரை டெல்லியிலேயோ அல்லது புதுச்சேரியிலேயோ சந்திக்கும் போது மாநில அந்தஸ்து கிடைக்க தொடர்ந்து வலியுறுத்தினாலே போதுமானது. நாராயணசாமி முதலமைச்சராக இருந்த போது தன்னுடைய தனிப்பட்ட அதிகாரத்திற்காக வீதியில் இறங்கி வடை சுட்ட போராட்டம் போன்று இப்போதைய முதல்வர் ரங்கசாமி அவர்களும் தனது தரத்தை குறைத்துக்கொண்டு போராட வேண்டும் என நாராயணசாமி கூறுவது கேளிக்கூத்தாக உள்ளது.


தான் முதலமைச்சராக இருந்த போது அதிமுக கொண்டு வந்த மாநில அந்தஸ்து தீர்மானத்தை தனது அமைச்சரவையில் இருந்த ஒரு அமைச்சர் எதிர்த்த போது அந்த தீர்மானத்தை ஒரு மனதாக நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டவர் தான் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி. தன்னுடைய பதவியின் சுகத்துக்காக தன்னுடைய அமைச்சரவையிலேயே மாநில அந்தஸ்தை எதிர்த்த அமைச்சரிடம் அடிபணிந்து அடிமையாக இருந்ததை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மறந்துவிட கூடாது. புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து என்பது அவசியமான ஒன்றாகும். இது சம்பந்தமாக புதுச்சேரி அரசும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைக்கும் புதுச்சேரி மாநில அதிமுக என்றும் துணைநிற்கும் என கூறினார்.