கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் அறிக்கையை கமல்ஹாசன் இன்று வெளியிட்டார். பின்னர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
உன்னதமானது
மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கை ஒரு நீண்ட தொலைநோக்குடன், தமிழகத்தைச் சீரமைக்க வேண்டும் என்ற திட்டமிடலுடன் உருவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு வாழும் உயிருள்ள ஆவணமாகக் கொள்ளக்கூடியது. இதைப் பார்த்துவிட்டு பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள், தங்கள் யோசனைகளைத் தெரிவித்தால் அதற்கேற்ப மாற்றங்களைச் செய்யக் கூடிய வகையில் இதனை உருவாக்கியுள்ளோம். இந்தத் தேர்தல் அறிக்கை உன்னதமானது.
ஏமாற்று வேலை
இலவசங்கள் என்பது கட்சியினர் மக்களுக்குக் கொடுப்பது இல்லை. அடுத்தடுத்து வரும் இலவசங்கள் என்பது மக்கள் தலையில் ஏறும் கடன் என்பதைப் பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இலவசங்களை வழங்குவதில் மக்களை ஏமாற்றிக் கட்சியினர் சம்பாதிப்பதே உண்மை. இந்த ஏமாற்று வேலைகள் எதுவும் இல்லாத புதிய திட்டம் எங்களுடையது.
தமிழகத்தில் நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்துத் துறை, மின்சார வாரியம் போன்றவை லாபகரமான துறைகளாக மாற்றப்படும். இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000, ரூ.1500 கொடுப்பது ஊதியம் ஆகாது. அவர்களுக்கான உழைப்பை ஊதியமாகக் கொடுப்பதே நியாயமானது, சரியானது. அவர்களின் திறமையை மேம்படுத்தி, அதற்கேற்ப ஊதியம் வழங்குவதே முக்கியமானது.
எங்களது தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளவை அனைத்தும் செயல்படுத்தக்கூடிய திட்டங்களாக உள்ளன. பிற கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கைகளில், அவர்கள் செய்த தவறுகளை மறைக்க இலவசங்களை அறிவித்துள்ளன. அதெல்லாம் இல்லாமல் தனித்துவமாக இந்தத் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கேண்டீன்
எங்களது அறிக்கையில் மக்கள் கேண்டீன் என்ற திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ராணுவத்துக்கு உள்ளது போல் மக்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் தரமாகவும், நியாயமான விலையிலும் கிடைக்கும்.
ஒரு மாநிலத்தில் தலைநகரம் மட்டும் அனைத்து வசதிகளுடன் இருந்தால் போதாது. அனைத்து முக்கிய நகரங்களிலும் அனைத்து வசதிகளும் இருக்க வேண்டும். அதன்படி, அனைத்து மாநகராட்சிகளிலும் மக்களுக்குக் கட்டுபடியாகும் கட்டணத்தில் மெட்ரோ ரயில் சேவை செயல்படுத்தப்படும். நீட் தேர்வுக்கு பதிலாக சீட் என்ற பெயரில் தமிழக அரசின் பாடத்திட்டத்தில் மருத்துவ நுழைவுத்தேர்வு நடத்தும் திட்டங்கள் உள்ளன. மாநில சுயாட்சி உரிமையை வலியுறுத்தி இதைக் கொண்டு வர முடியும். பொறியியல் படிப்புக்கு இதைக் கொண்டு வரும் திட்டம் இல்லை.
வருமான வரிச் சோதனை
பா.ஜ.க.வில் உள்ளவர்கள் தவிர, மற்றவர்கள் அனைவரது வீடுகளிலும் தற்போது வருமான வரிச் சோதனை நடைபெறுகிறது. மக்கள் நீதி மய்யம் பொருளாளர் சந்திரசேகர், எங்கள் கட்சியின் கணக்கு வழக்குகளில் எந்த முரண்பாட்டையும் இழைத்திருக்க மாட்டார். தனிநபர் மீதான வருமான வரிச் சோதனை கட்சியைப் பாதிக்காது. அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட வேண்டும். சட்டம் தன் வேலையைச் செய்யட்டும். எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் லோக் ஆயுக்தாவை வலுப்படுத்தும் திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.