தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 6-ந் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, அதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 12-ந் தேதி தொடங்கியது. வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 19-ந் தேதி என்று ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதையடுத்து, கடைசி நாளான இன்று ஆயிரக்காணோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இன்று மாலையுடனும் வேட்புமனு தாக்கலும் நிறைவு பெற்றது.


தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் போட்டியிட மொத்தம் 4,621 நபர்கள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். ஆண்கள், 3,867 நபர்களும், பெண்கள் 752 நபர்களும், மூன்றாம் பாலினத்தர் 2 பேரும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். 
அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 71 நபர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். குறைந்தபட்சமாக விளவங்கோடு தொகுதியில் போட்டியிட 6 நபர்களும் போட்டியிடுகின்றனர். மூன்றாம் பாலினத்தவர்கள் மயிலாப்பூர் மற்றும் மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிடுகின்றனர்.


முதல்வர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் 25 நபர்களும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் 40 நபர்களும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். 
இதுதவிர, கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட ஒரு பெண் உள்பட 12 நபர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கு 22ம் தேதி கடைசிநாள் ஆகும். 22-ந் தேதி மாலை இறுதிகட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.