திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா சில நாள்களுக்கு முன்பு பரப்புரை ஒன்றில் பேசும் போது தமிழக முதல்வரை கள்ள உறவுக்கு பிறந்த ஊனமுற்ற குழந்தை என்ற வகையில் பேசியிருந்தார். அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். கனிமொழி மற்றும் ஜோதிமணி ஆகியோரும் பெயர் குறிப்பிடாமல் தங்களது கண்டனத்தை பதிவு செய்திருந்தனர்.


இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ராமதாஸ் “தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமியையும், திமுக தலைவர் ஸ்டாலினையும் ஒப்பீடு செய்யும் வகையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா தெரிவித்துள்ள கருத்துகள் மிகவும் அருவருக்கத்தக்கவை. பெரியாரின் திருவுருவப் படத்தைப் பின்னணியில் வைத்துக்கொண்டு பெண்மையை இழிவுபடுத்தும் வகையில் பேசப்பட்ட பேச்சுகள் மிகவும் கண்டிக்கத்தக்கவை.


அரசியல் கட்சிகளின் மக்கள் நலப் பணிகளை மக்கள் எடை போடுவதற்கான களம் தேர்தல்கள்தான். அத்தகைய தேர்தல்களில் ஒவ்வொரு கட்சியும் தங்களின் சாதனைகளையும், எதிர்க்கட்சிகளின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளின் அடிப்படையிலான குறைகளையும் மக்கள் மன்றத்தின் முன்வைத்து அவர்களின் ஆதரவைத் திரட்டுவதுதான் அறமாக இருக்கும். அதுதான் நாகரிகமும் ஆகும்.




ஆனால், 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலைப் பொறுத்தவரை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது தனிநபர் தாக்குதல்களையே திமுக தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. சசிகலாவையும், முதல்வரையும் இழிவுபடுத்தும்  வகையில் அருவருக்கத்தக்க ஒரு கருத்தைக் கூறி திமுகவின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தான் இந்தப் பிரச்சாரத்தில் இத்தகைய அணுகுமுறையை தொடங்கி வைத்தார்.


அவரைத் தொடர்ந்து ‘‘முதல்வர் தரையில் ஊர்ந்து சென்றவர், ‘‘முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மதிப்பு திமுக தலைவர் ஸ்டாலின் அணிந்துள்ள காலணியின் மதிப்பை விட ஒரு ரூபாய் குறைவு’’, ‘‘முந்தா நாள் வரை வெல்லமண்டியில் வேலை செய்து வந்த எடப்பாடி பழனிசாமி ஸ்டாலினுக்கு ஈடாக முடியாது’’ என்றெல்லாம் அருவருப்பாக விமர்சித்து வந்த திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, அதன் உச்சமாக முதல்வரின் பிறப்பையும், வழிபடத்தக்க வகையில் வாழ்ந்து மறைந்து அவரது தாயார் தவசாயி அம்மாளையும் இழிவுபடுத்தும் வகையில் வார்த்தைகளைக் கொட்டியிருக்கிறார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது.


அரசியல் வரலாற்றிலும், பயணத்திலும் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி எந்த வகையிலும் குறைந்தவர் அல்ல. இன்னும் கேட்டால் திமுக தலைவருக்கு மகனாக பிறந்து அக்கட்சியின் தலைவராக முடிசூட்டப்பட்ட ஸ்டாலினுடன் ஒப்பிடும்போது, அதிமுகவில் கிளைச் செயலாளராகப் பணியைத் தொடங்கி கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராகவும், முதல்வராகவும் முன்னேறியுள்ள பழனிசாமிதான் அரசியல் திறன் மிக்கவர்.




இருவரையும் ஒப்பிடுவதற்கு எவ்வளவோ நாகரிகமான வார்த்தைகள் இருக்கும் நிலையில் ஆ.ராசா பயன்படுத்தியுள்ள வார்த்தைகள் அவரது தரத்தையும், அவர் கொள்கை பரப்புச் செயலாளராகப் பணியாற்றிய திமுகவின் தரத்தையும் அம்பலப்படுத்துவதாக அமைந்திருக்கின்றன. தமிழ்நாடு பெண்களைக் கடவுளாக மதிக்கும் பூமியாகும். கற்புக்கரசி கண்ணகியும், ஆண்டாளும் இந்த பூமியில் வாழ்ந்தார்கள். அவர்களை இந்த பூமி இன்னும் கடவுளாக வணங்கிக் கொண்டிருக்கிறது.


ஆனால், தொடக்கத்திலிருந்தே திமுகவுக்கு பெண்களை மதிப்பது என்றால் என்னவென்றே தெரியாது. தமிழ்நாட்டின் தேர்தல் களத்தில் பேசப்பட வேண்டியவை பிரச்சினைகள்தானே தவிர, பிறப்புகள் குறித்த அவதூறுகள் அல்ல. முதல்வரைப் பற்றி பேசுவதற்கு எதுவும் இல்லாததால்தான் திமுக இத்தகைய அருவருக்கத்தக்க, ஆபாசமான, இழிவான பிரச்சாரத்தை முன்னெடுத்திருப்பதாகத் தோன்றுகிறது.


தேர்தலில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சம்தான் திமுகவினரை இத்தகைய இழிவான தனிநபர் தாக்குதல்களில் ஈடுபட வைக்கிறது. இது அரசியல் நாகரிகமல்ல. யாரெல்லாம் அருவருக்கத்தக்கவர்களோ, இழிவானவர்களோ அவர்கள்தான் இத்தகைய அணுகுமுறையைக் கடைப்பிடிப்பார்கள். திமுக இத்தகைய அணுகுமுறையை மாற்றிக்கொண்டு கொள்கை பேச வேண்டும்.


பெண்மையைப் போற்றுபவர்கள் என்று தங்களைத் தாங்களே கூறிக்கொள்ளும் திமுக கூட்டணிக் கட்சிகளும், பிற கட்சிகளும் இதைக் கண்டிக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது அவர்களின் அரசியல் நேர்மை குறித்த ஐயங்களை ஏற்படுத்துகிறது.


தமிழ்நாட்டின் தேர்தல் களத்தில் நடைபெறும் அனைத்தையும் தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலில் அவர்கள் சரியான தீர்ப்பை வழங்குவார்கள் என்று நம்புகிறேன்” என கூறியுள்ளார்.