தேர்தல் நேர பணிகளுக்காக மாவட்ட ஆட்சியர்களின் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து தேர்தல் நடத்தை விதிமீறல்கள் மற்றும் வாக்காளர்களுக்குப் பணம், பரிசுப் பொருட்கள் விநியோகிப்பதாக வரும் புகார்களைப் பெறும் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், உடனடியாகச் சம்பந்தப்பட்ட பறக்கும்படை அல்லது நிலையான கண்காணிப்புக் குழுவுக்குத் தகவல் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், வால்பாறை தொகுதிக்குட்பட்ட ஒரு இடத்தில், தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாகப் புகார் அளிக்கப்பட்டது. அது தொடர்பான தகவல் அறிந்தும், சம்பந்தப்பட்ட நிலையான கண்காணிப்புக் குழுவினர் உடனடியாகச் செல்லாமல் இரண்டு மணிநேரம் தாமதமாகச் சென்றுள்ளனர்.
இதையறிந்த, வால்பாறை தொகுதிக்கான தேர்தல் பொது மேற்பார்வையாளர் மாவட்ட ஆட்சியருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்திய மாவட்ட ஆட்சியர் நாகராஜன் சம்பந்தப்பட்ட நிலையான கண்காணிப்புக் குழுவின் அதிகாரியான வட்டார வளர்ச்சி அலுவலர் வெள்ளிங்கிரி, காவலர்கள் பிரசாந்த், குமரவேல் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இவர்களைத் தேர்தல் பணியில் இருந்து விலக்கவும், வால்பாறை தொகுதி தேர்தல் அலுவலருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.