வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது மீண்டும் அந்த சட்டத்தை இயற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பும் இயக்கத்தை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் அடுத்த திருவிடந்தை கிராமத்தில் துவக்கி வைத்தார். முன்னதாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது குடும்பத்துடன்,  முதலமைச்சருக்கு கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.



 

பின்னர், திருவிடந்தை கிராம பகுதிகளில், வீடு வீடாக சென்று பொது மக்களை சந்தித்து இட ஒதுக்கீட்டின் அவசியம் குறித்து எடுத்துரைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொது மக்களிடையே கடிதங்களை வழங்கினார். வீடு வீடாக சென்று, ஒவ்வொரு வரியும் நேரடியாக சந்தித்து, இட ஒதுக்கீடு என்பது மிக முக்கியம், சாதிவாரியாக கணக்கெடுத்து இட ஒதுக்கீடு தர வேண்டும் என ஒவ்வொருவரும் கடிதம் எழுத வேண்டும் என பொதுமக்களிடம் கோரிக்கைகளை முன் வைத்தார்.



 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வன்னியர் உள் இடஒதுக்கீடு சட்டம் செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு செய்ய வழிவகை செய்யும் வகையில், 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி அதிமுக ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.



 

ஆனால் திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த சட்டம் ரத்து செய்யப்பட்டது. இது குறித்து உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு அரசு வன்னியர்கள் இட ஒதுக்கீடு குறித்து பரிசீலனை செய்து அறிக்கை அனுப்ப தமிழ்நாடு அரசுக்கு கூறி  ஓராண்டுக்கு மேல் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் தமிழ்நாடு அரசு எடுக்கவில்லை, எனவே தமிழ்நாடு அரசுக்கு நினைவூட்டும் வகையில்  முதன் முதலாக நானும் எனது மனைவியும் முதல்வருக்கு கடிதம் அனுப்பி உள்ளோம், அதனைத் தொடர்ந்து  இன்று இந்த திருவிடந்தை பகுதியில் இருந்து துவங்கியுள்ளோம்,



 தமிழ்நாடு முதல்வர், வரும் மே 31 ஆம் தேதிக்குள் 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து மாபெரும் போராட்டத்தை நடத்துவோம் என   கூறினார். இந்த நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.