சேலம் மாவட்டம் ஆத்தூரில் மத்திய அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் சமூக நீதி வார விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியை இந்தியாவின் பொற்காலம் என ஏழை எளிய மக்கள் கொண்டாடுகிறார்கள். 9 ஆண்டுகளில் இந்தியா அபரிமிதமான வளர்ச்சியைப் பெற்றுள்ளதாக உலக நாடுகளின் தலைவர்களும் பாராட்டுகிறார்கள். ஏழைகளின் நலன், சிறந்த ஆட்சி நிர்வாகம் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு மத்திய அரசு செயல்படுகிறது. இதன் அடிப்படையில் கடந்த 9 ஆண்டுகளில் பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 11 லட்சம் பேருக்கு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. இதன் மூலம் சொந்த வீடு என்கிற கனவு 11 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு நனவாக மாறியுள்ளது.
கடந்த 2009-2014 5 ஆண்டுகால காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியில் தமிழகத்திற்கு ரயில்வே திட்டங்களுக்கு ரூ.860 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் நடப்பு நிதியாண்டில் ஒரு ஆண்டுற்கு மட்டும் தமிழ்நாட்டிற்கு ரூ.6 ஆயிரம் கோடி நிதியை பிரதமர் மோடி ஒதுக்கீடு செய்துள்ளார். மேலும் 9 புதிய ரயில் பாதைகள் திட்டத்திற்கும் அனுமதி அளித்துள்ளார். பாதுகாப்பு (DEFENCE CORRIDAR) வழித்தடம் திட்டத்தின் மூலம் கோவை முதல் ஒசூர் வரையிலான சிறு குறு நடுத்தர தொழில் முனைவோர் பயனடைவார்கள். இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த ஜவுளிப்பூங்கா தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு லட்சம் பேர் நேரடியாகவும், 10 லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறும் சூழ்நிலையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
நம்மை அடிமைப்படுத்தி ஆட்சி நடத்திய இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி உலக பொருளாதாரத்தில் 5-ம் இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது. சமூக நீதி என்றால் என்ன என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் திமுக பாடம் கற்க வேண்டும். சமூக நீதி குறித்து பேசி வரும் திமுக ஆட்சியில் பட்டியலின அமைச்சர்களுக்கு முக்கியமான துறைகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. ஆனால் பாரதிய ஜனதாக் கட்சி ஆளும் மாநிலங்களில் முதலமைச்சருக்கு அடுத்தபடியாக முக்கியமான துறைகள் பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பட்டியலின அமைச்சர்களை கடைசி இடத்தில் வைப்பதுதான் திராவிட மாடல் ஆட்சி. இதுபோன்ற திராவிட மாடல் ஆட்சியை குப்பையில்தான் போட வேண்டும். தமிழகத்திற்கு தேவை திராவிட மாடல் ஆட்சி அல்ல. பிரதமர் மோடியின் ஆன்மீக மாடல் ஆட்சிதான் தமிழகத்திற்குத் தேவை. ஆன்மீக மாடல்தான் இந்தியா முழுமைக்கும் நல்லாட்சியைத் தந்து கொண்டிருக்கிறது என்று மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் பேசினார். இந்நிகழ்ச்சியில் சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளரும் பாரதிய ஜனதாக் கட்சியின் மாநில துணைத் தலைவருமான கே.பி.ராமலிங்கம், சேலம் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர் சண்முகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.