நாடாளுமன்ற கேண்டீனில் பிரதமர் மோடி 8 எம்.பிக்களைச் சந்தித்து பேசியது, தற்போது ஊடகங்களில் மட்டும் இல்லாமல் பாஜக உள்வட்டாரத்திலும் பரபரப்பை கிளப்பியுள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில் பிரதமர் மோடி தனியாக 8 எம்.பிகளை அழைத்து பேசியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த 8 எம்.பிக்களில் பாஜக மட்டும் இல்லாமல் மற்ற கட்சி எம்.பிகளுக்கும் பிரதமர் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்களிடத்தில் தேர்தல் தொடர்பாக ரகசியமாக பிரதமர் எதாவது பேச்சுவார்த்தை மேற்கொண்டு இருக்கலாம் என கூறப்படுகின்றது.
நாடாளுமன்ற கேண்டீனில் மதிய உணவுக்கு தன்னுடன் இணைந்து கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் 8 எம்.பிக்கள் பிரதமருடன் இணைந்து மதிய உணவு சாப்பிட்டுள்ளனர்.
இந்த சந்திப்பின்போது, நான் இன்று உங்களைத் தண்டிக்கப் போகிறேன், என்னுடன் வாருங்கள் என்று பிரதமர் எம்.பி.க்களிடம் விளையாட்டாக கூறியதாக கூறப்படுகிறது. இவர்கள் அனைவருக்கும் அரிசி, பருப்பு , கிச்சடி , தில் கா லட்டு ஆகியவை மதிய உணவில் பரிமாறப்பட்டதாக கூறப்படுகின்றது.
யாருக்கெல்லாம் அழைப்பு?
பிரதமரின் அழைப்பின் பேரில், தெலுங்கு தேசம் கட்சி சார்பில் ராம் மோகன் நாயுடு, பிஎஸ்பி சார்பில் ரித்தேஷ் பாண்டே, பாஜகவின் லடாக் எம்பி ஜம்யாங் நம்க்யால், மத்திய அமைச்சர் எல் முருகன், பிஜேடியின் சஸ்மித் பத்ரா, பாஜகவின் மகாராஷ்டிரா எம்பி ஹீனா காவித் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த மதிய உணவின் போது, எம்.பி.க்கள், கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, பிரதமரின் வாழ்க்கை முறை, அவர் எப்போது காலையில் எழுந்திருக்கிறார், எப்படி இவ்வளவு நெருக்கடியான அட்டவணையை நிர்வகிக்கிறார் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளைக் கேட்டுள்ளனர்.
எம்.பி.க்கள் கேன்டீனில் மதிய உணவுக்காக பிரதமருடன் இது முற்றிலும் சாதாரணமான, அன்பான சந்திப்பு. இது ஒரு நல்ல அரோக்யமான அரசியலின் சைகை என்று எம்.பி. ஒருவர் ஊடகத்திடம் கூறியுள்ளார். நாங்கள் பிரதமருடன் அமர்ந்திருப்பது போல் உணரவில்லை என்று மற்றொரு எம்.பி கூறியுள்ளார்.
பல்வேறு விஷயங்களைப் பற்றி பிரதமரிடம் பேசியதாக கூறப்படும் இந்த சந்திப்பில், பரபரப்பான தேர்தல்களுக்குப் பிறகு அடுத்த பாகிஸ்தான் அரசாங்கத்தை அமைக்கும் நம்பிக்கையில் உள்ள நவாஸ் ஷெரீப்பைச் சந்தித்து உள்ளிட்ட அவரது வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் மற்றும் ஒற்றுமை சிலை எனப்படும் வல்லபாய் பட்டேல் சிலை திறந்தது உள்ளிட்டவை குறித்து பேசியதாகவும் கூறப்படுகின்றது.
இந்த சந்திப்பில், 2018 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டிய அபுதாபி கோவிலைப் பற்றியும், அடுத்த வாரம் அந்த கோவிலை பிரதமர் பார்வையிட உள்ளதாகவும் எம்.பிகளிடம் பேசியுள்ளார். அபுதாபியில் இது முதல் இந்து கோவில் திட்டம் என்று பிரதமர் கூறியுள்ளார்.