எம்.ஜி.ஆர் குறித்து சர்ச்சைக்குள்ளான வகையில் பேசிய நீலகிரி மக்களவை தொகுதி உறுப்பினரும், திமுக துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசாவை கண்டித்து, திருப்பூர் மாவட்டம் அவினாசியில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி, ”ஆண்டிமுத்து ராசா வேண்டும் என்றே திட்டமிட்டு எம.ஜி.ஆர் அவர்களை, வாய்கொழுப்பு ஏறி பேசியதை கண்டித்து போராட்டம் நடத்தப்படுகிறது. சில தலைவர்கள் தன் மக்களுக்காக வாழ்ந்தவர்கள், எம்.ஜி.ஆர் பொதுமக்களுக்காக வாழ்ந்த தலைவர்.
நாவடக்கம் தேவை:
அ.தி.மு.க.விற்கு மக்களிடையே இருக்கும் செல்வாக்கினால் பொறமையால், எம்.ஜி.ஆரை ஆ.ராசா விமர்சித்து இருக்கின்றார். இதனால்தான் தீய சக்தி தி.மு.க.வை வேறோடு அழிக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர் சொன்னார். இப்படிபட்டவர்கள் அகற்றப்பட வேண்டும். ஆ.ராசாவின் பேச்சு எம்.ஜி.ஆர் அனுதாபிகள், தொண்டர்கள் மனதை வேதனையடைய செய்து இருக்கின்றது. ஆ.ராசாவிற்கு நாவடக்கம் தேவை. வீட்டிற்கு அடங்காத பிள்ளை நாட்டுக்கு அடங்குவார் என சொல்வார்கள். மக்கள் வெகுண்டு எழுந்தால் ஆ.ராசா தாக்குப் பிடிப்பாரா?
அனைவரையும் வாழ வைத்த பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு. கருணாநிதி குடும்பம் கடனில் தத்ததளித்து கொண்டு இருந்த போது, அவரது குடும்பத்தினருக்காக சம்பளம் வாங்காமல் நடித்து கொடுத்தவர் எம்.ஜி.ஆர். எங்கள் தங்கம் படம் நூறாவது நாள் விழாவில் இந்த தகவலை சொன்னவர் மாறன். தி.மு.க.வின் முரசொலி நாளிதழில் இது வந்தருக்கின்றது. எதிரியையும் வாழ வைத்தவர் எம்.ஜி.ஆர்.
அருகதை கிடையாது:
ஆ.ராசா என்று சொன்னால் அசிங்கமாக இருக்கின்றது. மரியாதை இழந்த மனிதர் ஆ.ராசா. ஆ.ராசா எப்பேர் பட்டவர் என்றால், கண்ணுக்கு தெரியாத காற்றில் ஊழல் செய்தவர் ஆ.ராசா. விஞ்ஞான ஊழல் செய்யும் கட்சி திமுக. எம்.ஜ.ஆரை பற்றி பேச ஆ.ராசாவிற்கு அருகதை கிடையாது. ஆ.ராசா இனியாவது உளறுவதை விட்டு விட்டு, நல்லதை பேசி பழகுங்கள். நீங்கள் திருந்தாவிட்டால், திருத்துகின்ற நிலைக்கு தள்ளப்படுவீர்கள். அத்திகடவு அவனாசி திட்டத்தை கொண்டு வந்து 90 சதவீத பணிகளை நிறைவேற்றினோம். ஆனால் மீதமுள்ள 10 சதவீத பணிகளை செய்யாமல் இரண்டரை ஆண்டுக்கு மேலாக இந்த அரசு காழ்புணர்ச்சியோடு முடக்கி வைத்து இருக்கின்றது. இதற்கு வரும் தேர்தலில் இந்த 3 மாவட்ட விவசாயிகள் பதில் கொடுப்பார்கள். 6 மாதத்தில் இந்த திட்டத்தை முடித்து இருக்கலாம்.
அதிமுக கொண்டு வந்த திட்டங்களை ஸ்டிக்கர் ஓட்டி திறத்து வைக்கின்றனர். மின்கட்டண உயர்வு காரணமாக கோவை, திருப்பூர் மாவட்ட தொழில்முனைவோர் அவதிப்படுகின்றனர். அந்நிய செலவாணியை ஈட்டிதரும் திருப்பூர் ஸ்மார்ட் சிட்டிக்கு பல திட்டங்களை கொண்டு வந்தது அதிமுக. இந்த ஆட்சியில் விலைவாசி 40 சதவீதம் உயர்ந்து இருக்கின்றது. இதுபற்றி கவலை இல்லாமல் இந்த அரசு உள்ளது. ஸ்பெயினுக்கு சென்று புரிந்துணர்வு போடப்பட்ட மூன்று நிறுவனங்கள் தமிழகத்தை சேர்ந்த நிறுவனங்கள். மூன்றுமே தமிழகத்தை சேர்ந்த நிறுவனம் என்ற நிலையில், இவர் ஸ்பெயின் நாட்டிற்கு போவதற்காக, அங்கு போய் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு நாடகத்தை அரங்கேற்றி இருக்கின்றார். முதல்வர் வெளிநாட்டிற்கு தொழில் முதலீடு செய்ய போயிருக்கின்றார் என மக்கள் பேசிக்கொள்கின்றனர். சென்னையில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் இந்த நிறுவனங்களை வரச்சொல்லி ஒப்பந்தம்போட்டு இருக்கலாம். ஸ்பெயினுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக இந்த நாடகம் போடப்பட்டுள்ளது.
டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்:
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கின்றது. 2019 திமுக தேர்தல் அறிக்கை, சட்ட மன்ற தேர்தல் அறிக்கைகளில் சொல்லப்பட்டதை இது வரை நிறைவேற்றவி்ல்லை. மகளிர் உரிமை தொகை திட்டமும், அதிமுக தொடர்த்து நிர்பந்தம் செய்த காரணத்தால் மகளிர் உரிமை தொகை வழங்கப்படுகிறது. ஆட்சிக்கு வரும் முன்பு ஒரு பேச்சு, வந்த பின்னால் ஒரு பேச்சு என திமுக அரசு இருக்கின்றது. கட்டணமில்லா பயணம் என சொன்னார்கள். பின்னர் பிங்க் கலர் பேருந்தை தவிர மற்ற பேருந்தில் கட்டணம் என்கின்றனர். திமுகவினர் கவர்ச்சிகரமாக பேசுவார்கள், தேர்தலுக்கு பின்னர் வாக்குறுதிகள் கரைந்து விடும். நீலகிரி தொகுதியில் ஆ.ராசா மீண்டும் போட்டியிடுவார். எம்.ஜி.ஆரை அவதூறாக பேசிய ராசாவை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். இது தான் தண்டணை என்பதை காட்ட வேண்டும். எம்.ஜி.ஆரை யார் விமர்சித்தாலும் இதுதான் தண்டணை என்பதை காட்ட வேண்டும். 40 தொகுதிகளிலும் மிகப்பெரிய வெற்றியை குவிக்க உழைக்க வேண்டும். எம்.ஜி.ஆரை விமர்சித்தால் தட்டிகேட்க 2 கோடி தொண்டர்கள் இருக்கின்றார்கள்” எனத் தெரிவித்தார்.