பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரை வாழ்த்தியுள்ளதோடு, அவரை `குடிமக்களுக்கு உத்வேகம் அளிப்பவர்’ எனப் பாராட்டியுள்ளார். மேலும், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு மாநிலங்களவை விவாதங்களின் தரத்தை உயர்த்துவதில் முக்கிய பங்கு வகித்திருப்பதாகவும் பாராட்டியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், `மரியாதைக்குரிய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்! கடந்த பல பத்தாண்டுகளாக அவர் நாட்டுக்காக தீவிரமாக பணியாற்றியுள்ளார். நாட்டுக் குடிமக்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடியவராக இருக்கிறார். விவசாயம், ஊரக வளர்ச்சி, சமூக நலன் முதலானவற்றின் மீதான அவரது ஆர்வம் பாராட்டத்தக்கது’ எனக் கூறியுள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டு நாட்டின் குடியரசு துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு வரை அவருடன் நீண்ட காலம் நெருங்கிப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
`கடந்த பல ஆண்டுகளாக வெங்கையா நாயுடு அவர்களுடன் நெருங்கி பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருந்தது. அவரது வைராக்கியத்தையும், ஆற்றலையும் எப்போதும் ரசித்து வந்துள்ளேன். குடியரசு துணைத் தலைவராக, நாடாளுமன்ற விவாதங்களின் தரத்தை உயர்த்துவதில் அவர் முக்கிய பங்காற்றியுள்ளார்.. அவரின் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்திக்கிறேன்’ எனவும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர், `மாண்புமிகு இந்தியக் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு என் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். வெங்கையாவைப் போல அறிவு, நகைச்சுவை, சாமர்த்தியம் முதலானவை கொண்டிருப்பவர்கள் மிகக் குறைவு. தன் உடல்நலனில் ஆரோக்கியமானவராக, நீண்ட ஆயுளோடு அவர் வாழ வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக் காலம் வரும் ஆகஸ்ட் 10 அன்று முடிவுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.