பிரதமர் மோடியின் வருகைக்கு  எதிர்ப்பு; ஹைத்ராபாத்தில் வைக்கப்பட்ட மணி ஹைஸ்ட் பேனரின் படத்தினை தனது டிவிட்டர் பக்கத்தில் ஒய்.எஸ்.ஆர் பகிர்ந்ததால்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


பிரதமர் நரேந்திர மோடி, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள ஹைத்ராபாத்திற்கு இன்று சென்றுள்ளார். இந்நிலையில் அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அங்குள்ள எல்.பி நகருக்கு அருகில் வைக்கப்பட்ட பேனர் தெலுங்கானா அரசியல் களத்தையும் கடந்து தேசிய அரசியல் களத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது.


இந்த பேனரில் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமடைந்த வெப் சீரீஸான மணி ஹைஸ்ட் போஸ்ட்டர் பாணியில் பேனர் வைக்கப்பட்டிருந்தது. மேலும் அதில் “Mr N Modi, we only rob bank, you rob the whole nation” என்ற வாசகமும்  இடம் பெற்றிருந்தது. அதாவது, நாங்கள் வங்கியைத்தான் கொள்ளை அடித்தோம், ஆனால் பிரதமர் நரேந்திர மோடி நாட்டையே கொள்ளை அடித்துவிட்டார் என இருந்தது. இந்த பேனரின் போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரிய ஸ்மிதி கட்சியின் சமூக ஊடக ஒருங்கிணைப்பாளர் ஒய். சதீஸ் ரெட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, Such creativity! எனவும் கமெண்ட் செய்துள்ளார். இந்த டிவிட்டர் பதிவு தற்போது, தேசிய அளவிலான உரையாடலினை மிகவும் பரபரப்பாக ஏற்படுத்தியுள்ளது. 






மேலும், இது போன்ற பேனர்கள் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள திட்டமிடப்பட்டிருந்த மைதானத்திற்கு மட்டுமில்லாமல், முக்கிய நகரங்களான, பெகும்பெட், ஹைடெக் சிட்டி, நம்பெல்லி, எபிட்ஸ், பஞ்சாரா ஹில்ஸ்  மதபூர் மற்றும் லக்டிகபுல் ஆகிய இடங்களிலும் பிரதமர் நரேந்திர மோடியின் ஹைத்ராபாத் வருகையினை எதிர்த்து பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. அவற்றில், #பாய்பாய் என்ற ஹேஷ்டேக்குடன் ”போதும் மோடி, மக்களை கொல்லாதீர்கள்”  என்ற வாசகங்களும் இடம்பெற்றுள்ளன. மேலும், ரத்து செய்யப்பட்ட பண்ணை சட்டங்கள், அக்னிபாத் திட்டம், பணமதிப்பிழப்பு, பொதுத்துறை தனியார்மயமாக்கல் பற்றிய குறிப்புகளுடனும், கோவிட்-19 தொற்றுநோயை யூனியன் அரசாங்கம் கையாண்ட விதத்தினை கண்டித்தும் வாசகங்கள் இடம்பெற்றிருந்தது.


ஏற்கனவே பிரதமர் மோடி தமிழ் நாடு வரும்போது எல்லாம் GoBackModi என்ற ஹேஷ்டேக் பிரதமர் மோடியின் வருகையினை எதிர்க்கும் வகையில் இந்திய அளவில் டிவிட்டரில் ட்ரெண்ட் ஆகும். இந்நிலையில் ஹைத்ராபாத்தில் நடந்துள்ள இந்த பேனர் சம்பவம் பிரதமர் மோடிக்கு தென்னிந்தியாவில் ஏற்படும் எதிர்ப்பு என அரசியல் வட்டாரத்தில் பரவலான பேச்சினை ஏற்படுத்தியுள்ளது.