ஒடிசா மாநிலம் பரப்புரையின் போது, பிரதமர் மோடி, ஒடிசா மாநிலத்தில் உள்ள நகைகள் வைக்கப்பட்ட அறையின் தொலைந்து போன சாவியானது, தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்டதாக தெரிவித்தார். இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், என்ன நடந்தது? பிரதமர் மோடி என்ன பேசினார்? என்பது குறித்து பார்ப்போம்.
நடந்தது என்ன?
ஒடிசா மாநிலத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாக புரி ஜெகநாதர் ஆலயத்தில் உள்ளது. அங்கு நகைகள் உள்ளிட்டவைகளை வைக்கும் அறையின் சாவியானது காணாமல் போனதாக கூறப்படுகிறது. இந்த அறையை கடைசியாக 1985 ஆம் ஆண்டு திறக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட பிரதமர் மோடி பேசியதாவது, புரி ஜெகநாதரின் ஆலயத்தின் கருவூல அறையின் சாவியானது, தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட்டுவிட்டது. அந்த சாவியை தமிழ்நாட்டுக்கு அனுப்பியவர்கள் யார்? கொண்டு போனவர்கள் யார்? இவர்களை உங்களால் மன்னிக்க முடியுமா? என கேள்வி எழுப்பினார்.
இந்த பேச்சுதான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி, ஒடிசா மாநிலத்தின் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் மிகவும் நெருக்கமானவராகவும், இவரின் அரசியல் வாரிசாக பார்க்கப்படுகிற முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி கார்த்திகேயன் பாண்டியனை மறைமுகமாக விமர்சித்ததாக பார்க்கப்படுகிறது.
கார்த்திக் பாண்டியன் கருத்து:
இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு, முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி கார்த்திகேயன் பாண்டியன் தெரிவித்ததாவது, "பிரதமருக்கு, இதுகுறித்து தெரியுமென்றால், அவரிடம்தான் பல அதிகாரிகள் உள்ளனர். அவர்களுக்கு, அதைப்பற்றி தெரிந்திருக்க வேண்டும். சாவியை கண்டறிந்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்" என கார்த்திகேயன் பாண்டியன் தெரிவித்திருந்தார்.
( Image Source :Twitter/@MoSarkar5T )
முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்:
பிரதமர் மோடியின் கருத்துக்கு,முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட பலரும் கண்டனங்கள் தெரிவித்தனர். முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்ததாவது, ”ஒடிசாவில் உள்ள புரி ஜெகந்நாதர் கோயிலின் சொத்துக்களைக் களவாடும் திருடர்கள் போலத் தமிழர்கள் மீது பொய்ப்பழி சுமத்தியிருக்கிறார். வடக்கில் தமிழர்களைக் காழ்ப்புணர்வுடன் தூற்றுவதும், மாநிலங்களுக்கிடையே குரோதத்தைத் தூண்டுவதும் ஒரு பிரதமருக்கு அழகா? வாக்குகளுக்காக, தான் வகிக்கும் பொறுப்பின் கண்ணியத்தை மறந்து, நாளுக்கு நாள் இவ்வளவு தரக்குறைவாக நடந்து கொள்வதை பிரதமர் நிறுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தார்.
மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடியின் பேச்சானது தொடர் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. இந்நிலையில், இன்று இந்திய தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகள், தங்களது பேச்சுகளை கண்ணியத்துடன் கையாள வேண்டும் எனவும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.