பாகிஸ்தானியர் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம்:
ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிப்பவர்களை பாகிஸ்தானியர்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைத்ததாக கூறி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சித்துள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பொதுமக்களிடம் உரையாற்றினார், அப்போது பேசியதாவது “ஆம் ஆத்மிக்கு வாக்களித்த இந்நாட்டு மக்கள் பாகிஸ்தானியர்களா?, அமித் ஷா "நாட்டு மக்களை தவறாக பயன்படுத்துகிறார்".
“நேற்று அமித் ஷா டெல்லிக்கு வந்தார், அவருடைய பொதுக்கூட்டத்தில் 500க்கும் குறைவானவர்களே கலந்து கொண்டனர். டெல்லிக்கு வந்த பிறகு, அவர் நாட்டு மக்களை அசிங்கப்படுத்த ஆரம்பித்தார். ஆம் ஆத்மி ஆதரவாளர்கள் பாகிஸ்தானியர்கள் என்று கூறுகிறார்.
”பாகிஸ்தானியர்களா என கேள்வி?”
மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் கேட்க விரும்புகிறேன், டெல்லி மக்கள் 56% வாக்குகளுடன் 62 இடங்களை எங்களுக்கு அளித்து எங்கள் அரசாங்கத்தை அமைத்துள்ளனர். அப்படியென்றால் டெல்லி மக்கள் பாகிஸ்தானியர்களா? 117 இடங்களில் 92 இடங்களை பஞ்சாப் மக்கள் எங்களுக்கு வழங்கியுள்ளனர். அப்படியென்றால் பஞ்சாப் மக்கள் பாகிஸ்தானியர்களா?”, “குஜராத், கோவா, உத்தரப் பிரதேசம், அசாம், மத்தியப் பிரதேசம் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் உள்ள மக்கள் எங்களுக்கு அன்பையும் நம்பிக்கையையும் அளித்துள்ளனர். அப்படியென்றால் இந்நாட்டு மக்கள் அனைவரும் பாகிஸ்தானியர்களா? என தெரிவித்தார்.
”இந்தியத் கூட்டணி ஆட்சி அமையும்”
“என்னை துஷ்பிரயோகம் செய்யுங்கள். ஆனால், இந்த நாட்டு மக்களை வேண்டாம். உங்கள் பகை என்னுடன் உள்ளது. நீங்கள் இந்த நாட்டு மக்களை துஷ்பிரயோகம் செய்தால், அதை யாரும் சகித்துக் கொள்ள மாட்டார்கள்.
2024 மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும், அப்போது “மோடி அரசு விலகி, ஜூன் 4ஆம் தேதி இந்தியத் கூட்டணி ஆட்சி அமையும் என்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த திங்கள்கிழமை டெல்லியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசுகையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் ராகுல் காந்திக்கும் இந்தியாவில் ஆதரவாளர்கள் இல்லை, பாகிஸ்தானில்தான் அதிக ஆதரவாளர்கள் உள்ளனர் என்று அமித்ஷா கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.