பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடந்து வரும் நிலையில், பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசி வரும் கருத்துகள் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகின்றன. குறிப்பாக, இஸ்லாமியர்கள் குறித்து அவர் பேசிய கருத்துகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. 


"இஸ்லாமியர்களை பற்றி குறிப்பிடவில்லை"


இஸ்லாமியர்களுக்கு அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் இருப்பதாக பிரதமர் மோடி பேசியிருந்தார். தேர்தல் பொதுக்கூட்டத்தில் வளர்ச்சி பற்றி பேசாமல் இந்து, முஸ்லீம் விவகாரம் பற்றி மட்டுமே பிரதமர் மோடி பேசி வருவதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது.


ஆனால், தான் முஸ்லீம்களை குறிப்பிட்டு பேசவில்லை என்றும் சட்டவிரோத குடியேறிகள் பற்றி மட்டுமே பேசியதாக பிரதமர் விளக்கம் அளித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பிரதமர் மோடி அளித்த நேர்காணலில், "முஸ்லீம்களைப் பற்றி மட்டும் பேசவில்லை. ஒவ்வொரு ஏழைக் குடும்பத்தைப் பற்றியும்தான் பேசினேன்" என்றார்.


இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. அதிக குழந்தைகளை உடையவர்களை பற்றி ஒருவர் பேசும் போதெல்லாம், அவர்கள் முஸ்லீம்களை பற்றி பேசுகிறார் என்று உங்களுக்கு யார் சொன்னது? முஸ்லீம்களுக்கு ஏன் இவ்வளவு அநியாயம் செய்கிறீர்கள்?


மனம் திறந்து பேசிய பிரதமர் மோடி:


ஏழைக் குடும்பங்களிலும் இதுதான் நிலைமை. சமூக நிலையை பொருட்படுத்தாமல் பார்த்தால், வறுமை நிலவும் குடும்பத்தில் எல்லாம் அதிகமான குழந்தைகள் உள்ளனர். நான் இந்து அல்லது முஸ்லீம் என்று குறிப்பிடவில்லை.


ஒருவர் எவ்வளவு குழந்தைகளைப் பார்த்து கொள்ள முடியுமோ அவ்வளவு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று நான் கூறியுள்ளேன். உங்கள் குழந்தைகளை அரசு பார்த்துக்கொள்ள வேண்டிய நிலை வர வேண்டாம்" என்றார்.


குஜராத்தில் மோடி முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில்தான் கோத்ரா கலவரம்  நடந்தது. இதுபற்றி பேசிய பிரதமர் மோடி, "இந்தப் பிரச்னை முஸ்லீம்களைப் பற்றியது அல்ல. தனிப்பட்ட அளவில் மோடிக்கு முஸ்லீம்கள் எவ்வளவு ஆதரவாக இருந்தாலும், 'இதைச் செய், அதைச் செய்' என்று அவர்களுக்கு ஆணையிடும் எண்ணம் இல்லை.


மோடிக்கு இஸ்லாமியர்கள் வாக்களிப்பார்களா?


என் வீட்டில், என்னைச் சுற்றி எல்லா முஸ்லீம் குடும்பங்களும் உள்ளன. எங்கள் வீட்டிலும் ஈத் பண்டிகை கொண்டாடப்பட்டது. எங்கள் வீட்டில் மற்ற பண்டிகைகளும் கொண்டாடப்படும். பெருநாள் தினத்தில் எங்கள் வீட்டில் உணவு சமைக்கப்படுவதில்லை.


எல்லா முஸ்லீம் குடும்பங்களில் இருந்தும் எனது வீட்டுக்கு உணவு வரும். மொகரம் தொடங்கியபோது, ​​நாங்கள் எங்கள் சௌகரியத்தில் இருந்து வெளியே வர வேண்டி இருந்தது. எங்களுக்கு அது கற்பிக்கப்பட்டது. நான் அந்த மாறியான சூழலில் வளர்ந்தவன். இன்றும் எனது நண்பர்கள் பலர் முஸ்லீம்கள் இருக்கின்றனர். ஆனால், 2002-க்குப் பிறகு (கோத்ரா), என் இமேஜ் கெட்டுவிட்டது" என்றார்.


தனக்கு இஸ்லாமியர்கள் வாக்களிப்பார்களா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பிரதமர், "நாட்டு மக்கள் எனக்கு வாக்களிப்பார்கள். நான் இந்து - முஸ்லீம் விவகாரத்தை கையில் எடுக்கும் நாளில் இருந்து நான் பொது வாழ்க்கையில் வாழத் தகுதியற்றவராக மாறிவிடுவேன். நான் இந்து-முஸ்லிம் அரசியல் செய்ய மாட்டேன். இது எனது உறுதிமொழி" என்றார்.