பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடந்து வருகிறது. ஏற்கனவே, நான்கு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில், வரும் 20ஆம் தேதி 5ஆம் கட்ட வாக்குப்பதிவும் 25ஆம் தேதி 6ஆம் கட்ட வாக்குப்பதிவும் ஜூன் மாதம் 1ஆம் தேதி கடைசிக்கட்ட வாக்குப்பதிவும் நடைபெற உள்ளது.

பிரதமர் மோடியின் மொத்த சொத்து மதிப்பு:

பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி உள்பட 57 தொகுதிகளுக்கு ஜூன் மாதம் 1ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக, பிரதமர் மோடி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அதில், தனது கல்வித்தகுதி தொடர்பான தகவல்களையும் சொத்து மதிப்பையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, பிரதமர் மோடியின் மொத்த சொத்து மதிப்பு 3.02 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தனக்கு சொந்தமாக நிலம், வீடு, கார் என எதுவுமே இல்லை என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அதில் பெரும்பாலானவை, அதாவது 2.86 கோடி ரூபாய் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் நிரந்தர வைப்பு தொகையாக (fixed deposit) உள்ளது.

ரொக்கமாக அவரிடம் மொத்தம் 52,920 ரூபாய் உள்ளது. காந்திநகர் மற்றும் வாரணாசி என இரண்டு வங்கிக் கணக்குகளில் மொத்தமாக 80,304 ரூபாய் உள்ளது. தேசிய சேமிப்புச் சான்றிதழில் 9.12 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார். 2.68 லட்சம் மதிப்புள்ள நான்கு தங்க மோதிரங்கள் பிரதமரிடம் உள்ளன.

பிரதமர் மோடியின் கல்வித்தகுதி என்ன?

2018-19 ஆண்டில் 11.14 லட்சமாக இருந்த அவரது வருமானம் 2022-23ஆண்டில் 23.56 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. கல்வித்தகுதியை பொறுத்தவரையில், கடந்த1978ஆம் ஆண்டு, டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டத்தையும், 1983ஆம் ஆண்டில் குஜராத் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டத்தையும் முடித்ததாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். தன் மீது கிரிமினல் வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை என்று வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.

வாரணாசி தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடும் பிரதமர் மோடி, கடந்த 2014 மற்றும் 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இந்த முறை, உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய், அவரை எதிர்த்து களம் காண்கிறார்.
 
வாரணாசியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த பிரதமர் மோடி, வெள்ளை நிற குர்தா பைஜாமா மற்றும் நீல நிற சாத்ரி அணிந்திருந்தார். அப்போது, மத்திய அமைச்சர் அமித் ஷா, உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.