PM MODI TN Visit: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கவும், அடிக்கல் நாட்டவும் பிரதமர் மோடி இன்று திருச்சி வருகை தருகிறார்.


திருச்சிக்கு வரும் பிரதமர் மோடி:


திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைப்பது உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் பிரதமர் மோடி இன்று திருச்சி வருகிறார். அவருக்கு தமிழக அரசு சார்பில் மட்டுமின்றி, மாநில பாஜக சார்பிலும் வரவேற்பு அளிக்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள சூழலில், பிரதமர் மோடியின் தமிழக வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த பயணத்தின் போது பல்வேறு கூட்டணி கட்சி தலைவர்களை சந்திப்பதோடு, பாஜக நிர்வாகிகளை சந்தித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழ்நாட்டில் அதிமுக இல்லாத பாஜக கூட்டணி:


தமிழ்நாட்டில் அதிமுக உடனான கூட்டணி முறிந்தபிறகு முதன்முறையாக பிரதமர் மோடி தமிழகம் வருகை தருகிறார். பாஜக உடன் இன் கூட்டணி இல்லை என, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். அதேநேரம்,  அந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு பதில் இல்லாத சூழல் நிலவுகிறது.  இதனால், நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜவுடன் கூட்டணி அமைக்கப் போகும் கட்சிகள் யார் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் தான் திருச்சி வரும் மோடியை சந்திக்க புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், ஐஜேகே தலைவர் பாரிவேந்தர் ஆகியோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனாலும், அவர்களின் சந்திப்பு இதுவரை உறுதியாகவில்லை. ஒருவேளை அவர்கள் பிரதமரை சந்தித்தால், நாடாளுமன்ற தேர்தலில் இந்த கட்சிகள் கூட்டணியாக களமிறங்க வாய்ப்புள்ளது.


பிரதமரை சந்திக்கும் ஓபிஎஸ்:


இதனிடையே, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னிர் செல்வத்திற்கு, பிரதமரை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கவும்,  டெல்லி திரும்பும்போது மீண்டும் விமானநிலையத்தில் தன்னை சந்திக்கவும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு மோடி அனுமதி வழங்கியுள்ளார். இந்த சந்திப்பின்போது, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது அவரது துறையில்,  ரூ.4800 கோடி முறைகேடு நடந்துள்ளதாக விசாரணை நடத்த அனுமதி கேட்டு லஞ்ச ஒழிப்புத்துறை உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. அதை வைத்து அமலாக்கத்துறை, வருமான வரித்துறையினர் விசாரணை நடத்த வேண்டும் என்றும் பன்னீர்செல்வம் கோரிக்கை விடுக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.அவ்வாறு நடந்தால் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலர் தம்முடன் இணைவார்கள். அதன் மூலம் மீண்டும் அதிமுகவை கைப்பற்றுவது, நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் தான்தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று நிரூபிப்பது போன்றவை சாத்தியமாகும் என ஓபிஎஸ் கணக்கிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


பிரதமரை சந்திக்கும் அண்ணாமலை:


திருச்சி வருகையின் போது பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய கட்சி நிர்வாகிகளையும்,  பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். அப்போது, நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்குவது, திட்டங்களை வகுப்பது, கட்சியை வலுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை வழங்குவார் என கூறப்படுகிறது. ஆளுங்கட்சியான திமுகவை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்தும் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதேநேரம், தமிழக அமைச்சர்க மீதான புகார்கள் தொடர்பான ஆவணங்களை பிரதமர் மோடியிடம், அண்ணாமலை வழங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.