2024 ஆம் ஆண்டு பிறந்துவிட்டதால் இந்தியாவின் பெருநகரங்கள் தொடங்கி மூலை முடுக்குகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இன்னும் ஓய்ந்தபாடு இல்லை. பொதுமக்கள் இப்படி இருக்க, இன்னும் இரண்டு மாதங்களிலே அல்லது மூன்று மாதங்களிலோ மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதால் இந்தியா முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் தொடங்கி லெட்டர் பேட் கட்சிகள் வரை மிகவும் மும்முரமாக தயாராகி வருகின்றது. ஆளும் பாஜகவிற்கு மத்திய மற்றும் வடக்கு மாநிலங்களில் வாக்கு வங்கி இருந்தாலும், தென் மாவட்டங்களிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் பாஜகவுக்கு போதுமான செல்வாக்கு இல்லை. இதனை பயன்படுத்தி பாஜகவை ஆட்சிக் கட்டிலில் இருந்து வீழ்த்த பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் தொடங்கி நாடுமுழுவதும் உள்ள பெரும்பாலான எதிர்கட்சிகள் இணைந்து I.N.D.I.A கூட்டணியை உருவாக்கியுள்ளது. இந்த கூட்டணியினை வீழ்த்த பாஜகவுக்கு தற்போதுள்ள ஒரே நம்பிக்கை முகம் பிரதமர் நரேந்திர மோடி மட்டுமே என அரசியல் விமர்சகர்கள் மத்தியில் கூறப்படுகின்றது. இந்நிலையில் மக்கள் மத்தியில் யாருடைய அரசியல் கணக்கு எடுபடும் என்பதை பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும்.
மக்களவைப் பொதுத் தேர்தல் மட்டும் இல்லாமல் 2024ஆம் ஆண்டில் ஜம்மு காஷ்மீர், ஆந்திர பிரதேசம், அருணாசல பிரதேசம், ஹரியானா, மகாராஸ்ட்ரா, சிக்கிம் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் நடைபெறவுள்ளது. இந்த ஏழு மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் என்பது அந்தந்த காலகட்டத்தில் நடத்தப்படுமா அல்லது மக்களவைப் பொதுத் தேர்தலுடன் நடத்தப்படுமா என்பதையும் பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும். ஜம்மு காஷ்மீரைப் பொறுத்தவரையில் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் பொதுத் தேர்தல் நடத்திமுடிக்கப்பட்டிருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பிட்டுள்ளது.
ஆந்திர சட்டமன்ற பொதுத்தேர்தல்
ஆந்திராவில் தற்போது முதலமைச்சராக இருப்பது ஜெகன் மோகன் ரெட்டி. வரும் சட்டமன்ற பொதுத் தேர்தலில் இவரது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மீது ஊழல் வழக்குகள் பதியப்பட்டு கைது செய்யப்பட்டதால் இது கட்சிக்கு பின்னடைவாகவும், அதேநேரத்தில் மக்கள் மத்தியில் சந்திரபாபுவின் சிறைவாசம் ஓட்டாக மாறவும் வாய்ப்புள்ளது என கூறப்படுகின்றது. சட்டமன்ற பொதுத் தேர்தலில் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி தெலுங்கு தேசம் கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதால், ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு சவாலான தேர்தலாக அமையவுள்ளது. இங்கு மொத்தம் 175 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஆட்சியில் உள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 155 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஒடிசா சட்டமன்ற பொதுத்தேர்தல்
ஒடிசா மாநிலத்தினைப் பொறுத்தவரையில் அங்கு மொத்தம் 142 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது. ஒடிசாவில் முதலமைச்சராக உள்ள நவீன் பட்நாயக் கடந்த 24 ஆண்டுகளாக உள்ளார். ஒடிசா இவரது கோட்டை என்றே கூறலாம். 2019 தேர்தலில், 147 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் பிஜேடி 112 இடங்களைக் கைப்பற்றியது. பாஜக 23 தொகுதிகளில் வென்றது. காங்கிரஸ் கட்சி 9 இடங்களில் வெற்றி பெற்றது.
அருணாசலப் பிரதேச சட்டமன்ற பொதுத்தேர்தல்
வடகிழக்கு மாநிலங்களில் பாஜகவின் பலம் அதிகமாக உள்ள மாநிலம் என்றால் அது அருணாசலப் பிரதேசம்தான். மணிப்பூரில் அண்மையில் நடைபெற்ற கலவரம் பாஜகவுக்கு தேர்தலில் கைகொடுக்குமா என்பதை காத்திருந்துதான் காணமுடியும். 60 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட அருணாசலத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலில் பாஜக 41 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. அங்கு ஜனதா தளம் கட்சி 7 இடங்களிலும் காங்கிரஸ் 4 இடங்களிலும் வெற்றி பெற்றது.
சிக்கிம் சட்டமன்ற பொதுத்தேர்தல்
சிக்கிம் ஜனநாயக முன்னணிக்கும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சிக்கும் இடையே இருமுனைப் போட்டி நிலவுகிறது. இரண்டுமே மாநிலக் கட்சிகள் என்பதால் அங்கு தேசிய கட்சிகளின் வியூகங்கள் எடுபடுவதில்லை. மொத்தம் 32 தொகுதிகள் கொண்ட சிக்கிமில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி 17 இடங்களிலும், சிக்கிம் ஜனநாயக முன்னணி 15 இடங்களிலும் வெற்றி பெற்றது. தற்போது பிரேம் சிங் தமாங் முதலமைச்சராக உள்ளார்.
ஹரியானா சட்டமன்ற பொதுத்தேர்தல்
இந்த ஆண்டு ஹரியானாவிலும் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இங்கு உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளில் பாஜக கடந்த 2019ஆம் ஆண்டு 40 இடங்களில் வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல், ஜனநாயக ஜனதா கட்சியுடன் இணைந்து ஆட்சியமைத்துள்ளது. காங்கிரஸ் இந்த தேர்தலில் 31 இடங்களில் வெற்றி பெற்றது. இம்முறை நடக்கவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் ஹரியானாவில் தற்போது ஆளும் பாஜகவிற்கு சாதகமான முடிவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகாள் குறைவு என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது பிஜேபி எம்பியும் முன்னாள் WFI அதாவது இந்திய மல்யுத்த கூட்டமைப்புத் தலைவருமான பிரிஜ் பூஷன் ஷரன் சிங்கிற்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளும் அதனை பாஜக கையாண்டவிதமும் பாஜகவுக்கு தேர்தலில் தாக்கத்தினை ஏற்படுத்தும் என கூறப்படுகின்றது.
மகாராஷ்ட்ர சட்டமன்ற பொதுத்தேர்தல்
2019ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலுக்குப் பின்னர் மகாராஷ்ட்ராவில் பாஜகவின் அரசியல் வியூகங்களால் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த வண்ணம் இருந்தது. மொத்தம் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளில் 2019 தேர்தலில் பாஜக 106 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து இருந்தாலும், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனா மகா விகாஸ் அகாடி அரசாங்கத்தை அமைத்தது. ஆனால் கடந்த 2022ஆம் ஆண்டு ஏக்நாத் சிண்டேவின் அரசியல் முடிவுகள் சிவசேனா கட்சியில் பிளவினை ஏற்படுதியது. இதனால் தற்போது பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளது.