இந்தியாவுக்கு படித்த பிரதமர் தேவை. அப்போதுதான் வெறுப்பைத் தவிர்த்து நல்ல திட்டங்களை வகுத்து நம் தேசத்தின் முன்னோடிகளின் கனவுகளை நிறைவேற்ற முடியும் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.


ஆம் ஆத்மி கட்சியின் ஊடக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் நவாப் நசீர் அமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், மோடி ஹட்டாவோ தேஷ் பச்சாவோ (மோடியை வெளியேற்றி தேசத்தைக் காப்பாற்றுவோம்) என்ற பெயரில் ஒரு பிரச்சாரத்தை முன்னெடுக்கிறோம். அதைப் பற்றி விளக்கவே இந்த சந்திப்பு. மோடி கல்வியறிவு அற்றவர். அவரைப் போன்ற கல்வி கற்காதவர் இந்த தேசத்தை வழிநடத்த முடியாது.


இந்தியாவுக்கு ஒரு படித்த பிரதமர் தேவை. அவர் தான் வெறுப்புகளைக் கடந்து கொள்கைகளை வகுக்க முடியும். அதற்காகவே இன்று நாங்கள் இந்த பிரச்சாரத்தை தொடங்குகிறோம்.


இந்த பிரச்சாரத்திற்காக எங்கள் கட்சி பல்வேறு விமர்சனங்களை சந்திக்கலாம். ஏன் கைது நடவடிக்கைகள் கூட பாயலாம். ஆனால் அவை எதுவும் எங்களைத் தடுக்காது.


இந்த தேசத்தை பாதுகாகக் வேண்டும் என்றால். இந்த தேசத்தின் பிதாமகன்களான சர்தார் வல்லபாய் படேல், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோரின் கனவுகளை நினைவாக்க வேண்டுமென்றால் நரேந்திர மோடியை வெளியேற்ற வேண்டும். ஏனெனில் பிரதமர் மோடி நீதிமன்றங்கள், அமலாக்கத் துறை, தேர்தல் ஆணையம் என எல்லாவற்றையும் சொந்த ஆதாயங்களுக்காக துஷ்பிரயோகம் செய்கிறார். அதனால் நாம் ஒரு படித்த பிரதமரை தேர்வு செய்வோமாக. 


ஒவ்வொரு முஸ்லீமும், இந்துவும், சீக்கியரும் நல்ல கல்வி, சுகாதார சேவை, அமைதியையே விரும்புகின்றனர். ஆனால் இன்று இந்த அரசாங்கம் மாநில முதல்வர்களுக்கும், பாஜக அல்லாத கட்சியினருக்கும் அமலாக்கத் துறை மூலம் நெருக்கடி தருகிறது. ஆனால் நெருக்கடிக்கு உள்ளான நபர் பாஜகவில் ஐக்கியமாகிவிட்டால் உடனே அவர் மிஸ்டர் க்ளீன் ஆகிவிடுகிறார்.


மத்திய அரசு ஒரு சில பணக்கார தொழிலதிபர்களின் வளர்ச்சிக்காக மட்டுமே பாடுபடுகிறது. அவர்கள் சொல்வதுபோல் ஜம்மு காஷ்மீரில் எல்லாமே சரியாக இருக்கிறது என்றால் இங்கே தேர்தல் நடத்துவதில் அவர்களுக்கு அப்படி என்ன கஷ்டம் இருந்துவிட முடியும். இவ்வாறு அமான் பேசினார்.


முன்னதாக நேற்று பேசிய ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் நரேந்திர மோடி பிரதமராக இல்லாத நாளில் இந்தியா ஊழலற்ற நாடாக உருவாகும். பிரதமர் பதவியிலிருந்து மோடி விலகும் நாளில் பாஜக தலைவர்கள் அனைவரும் சிறையில் இருப்பார்கள், நாடு ஊழலில் இருந்து விடுபடும்.


ஊழல்வாதிகள் அனைவரும் ஒரே மேடையில் கொண்டு வரப்பட்டுள்ளனர் என்று பிரதமர் ஒரு விஷயத்தைச் சொன்னார். ஆனால் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ, பாஜகவில் உள்ள ஊழல்வாதிகள் அனைவரையும் சுற்றி வளைத்தது.  காலம் மாறுகிறது. இன்று மோடி பிரதமர். ஆனால் அவர் பிரதமராக நிரந்தரமாக இருக்க மாட்டார். நாளை அவர் நிச்சயமாக போய்விடுவார் என்று கூறியிருந்தார்.


மோடியை நேரடியாக கேஜ்ரிவால் விமர்சித்துப் பேசிய நிலையில் இன்று ஆம் ஆத்மி கட்சியின் ஊடக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் நவாப் நசீர், பிரதமர் மோடி கல்வியறிவற்றவர் என்ற விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.