நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் நான்காம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நிறைவடைந்தது. 400 இடங்கள் என்ற இலக்கை எட்டுவதற்காக தென் மாநிலங்களில் பாஜக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே, பிரதமர் மோடியின் பொதுக்கூட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சிக்கு அவர் ஆதரவு தெரிவித்து போல் பேசியுள்ளதாக இருக்கிறது
வைரலாகும் வீடியோ உண்மையானதா?
அந்த வீடியோவில், பிரதமர் மோடி பேசியது பின்வருமாறு, "காங்கிரஸ் அல்ல. டிஆர்எஸ் அல்ல. பாஜக அல்ல. நாங்கள் ஏஐஎம்ஐஎம்-க்கு மட்டுமே வாக்களிப்போம். ஏஐஎம்ஐஎம்-ஐ வெற்றி பெறச் செய்வோம் என தெலங்கானா சொல்கிறது".
"ஹைதராபாத்தில் ஏஐஎம்ஐஎம் கட்சியை மோடி ஆதரிக்கிறார்" என பேஸ்புக் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வைரல் வீடியோவை ஆய்வு செய்தோம். அது, பொய்யானது என தெரிய வந்தது. அந்த பேஸ்புக் பதிவின் இமேஜை கூகுளில் தேடி பார்த்தோம்.
அப்போது, பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் வைரலான வீடியோவின் முழு வீடியோ கிளிப்பை எங்கள் குழு கண்டறிந்தது. மே 10 ஆம் தேதி, அந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டது. அதன் கேப்ஷனில், "பிரதமர் மோடி நேரலை. தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பொதுக்கூட்டம். லோக்சபா தேர்தல் 2024" என குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த வீடியோவின் 12ஆவது நிமிடம் 47ஆவது நொடிகளில் இருந்து கேட்கையில், மோடி பின்வருமாறு பேசுகிறார், "காங்கிரஸ் இல்லை. டிஆர்எஸ் இல்லை. ஏஐஎம்ஐஎம் இல்லை. பாஜகவுக்கு மட்டுமே ஓட்டு போடுவோம். பாஜகவின் வெற்றியை உறுதி செய்வோம்" என்கிறார்.
இந்த வீடியோவில், ஏஐஎம்ஐஎம் கட்சிக்கு பிரதமர் மோடி ஆதரவு கேட்கவில்லை. Hindustan Times and The Statesman ஆகியவை பிரதமர் மோடியின் உரையை செய்தியாக வெளியிட்டுள்ளன. அதில், காங்கிரஸ், பிஆர்எஸ், ஏஐஎம்ஐஎம் கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் என்றே பிரதமர் மோடி கூறுகிறார்.
எனவே, ஏஐஎம்ஐஎம் கட்சிக்கு வாக்களிக்குமாறு பிரதமர் மோடி பேசும் வீடியோ எடிட் செய்யப்பட்டது என்பது ஆதாரப்பூர்வமாக தெரிய வருகிறது.
பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக newsmobile என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை சற்றே திருத்தி எழுதப்பட்டுள்ளது.