பி.எம் கேர்ஸ் நிதி அரசியலமைப்புக்கு அப்பாற்பட்டது அல்ல எனவும், பொது பொறுப்பில் இருந்து அதனை நீக்க முடியாது எனவும் டெல்லி நீதிமன்றத்தில் அதுதொடர்பான வழக்கில் வாதாடப்பட்டுள்ளது. 


டெல்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி விபின் சங்கி, நீதிபதி நவீன் சாவ்லா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன், சம்யாக் காங்க்வால் என்ற மனுதாரருக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் ஷ்யாம் திவான், `நாடாளுமன்றத்தின் சபாநாயகரும், சில உறுப்பினர்களும் அறக்கட்டளை ஒன்றை உருவாக்கி, அதில் நிதியுதவி செய்ய மக்களிடம் கேட்டுள்ளனர். அதற்கான காரணம் பாராட்டத்தக்கது. ஆனால் அதனை அரசுக்கு வெளியில் வைப்பதும், அது சி.ஏ.ஜி விசாரணையின் கீழ் வராது எனவும் கூறுவதை அரசியலமைப்புச் சட்டத்தின் படி ஏற்க முடியுமா?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 


இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சட்டப்பிரிவு 12-ன் படி, பி.எம் கேர்ஸ் நிதியை அரசுக்குக் கீழ் கொண்டு வர வேண்டும் என  சம்யாக் காங்க்வால் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவின் கீழ் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுள்ளது. 



பிஎம் கேர்ஸ் நிதி அரசு விளம்பரம்


மூத்த வழக்கறிஞர் ஷ்யாம் திவான் தனது வாதத்தின் போது, பி.எம் கேர்ஸ் நிதியை மத்திய அரசு தீவிரமாக கட்டுப்படுத்துகிறது எனவும், பிரதமர் அலுவலகம் மூலமாக அரசு உருவாக்கியது அது எனவும் தெரிவித்துள்ளார். `அரசு நிர்வாகத்தைப் போலவே பொது நிதியாக பி.எம் கேர்ஸ் நிதி செயல்படுகிறது. மேலும், அரசுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ள சிறப்பு விதிமுறைகளையும் அது பயன்படுத்திக் கொள்கிறது’ எனவும் அவர் கூறியுள்ளார். 


மத்திய அரசின் வழக்கறிஞர் ஜெனரல் துஷார் மேத்தா தற்போது நீதிமன்றத்திற்கு வராததால் இந்த வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என மத்திய அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. பின்னர், வீடியோ கான்பரன்சிங் மூலமாக நீதிமன்ற அமர்வு முன்னிலையில் ஆஜரான துஷார் மேத்தா, இந்த மனுவின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 



பிஎம் கேர்ஸ் நிதி அரசு விளம்பரம்


மூத்த வழக்கறிஞர் ஷ்யாம் திவான் கடந்த ஆண்டு இதே வழக்கில் வாதாடிய போது, அரசியலமைப்பு வெளிப்படைத்தன்மையைக் கோருவதாகவும், பி.எம் கேர்ஸ் நிதியும் அதே போல வெளிப்படைத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். அரசின் மூத்த அதிகாரிகளும், தலைவர்களும் இந்த நிதியை இந்திய அரசு உருவாக்கியதைப் போல விளம்பரப்படுத்தியதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 


மனுதாரரான சம்யாக் காங்க்வால் தன் மனுவில், பிரதமர், உள்துறை அமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர், நிதியமைச்சர் ஆகியோரை நிர்வாகிகளாகக் கொண்டுள்ள அறக்கட்டளையின் மீது அரசுக்குக் கட்டுப்பாடு இல்லை எனக் கூறியிருப்பது நாட்டு மக்களுக்கு அதிருப்தி உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விசாரணை தற்போது ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.