வி.கே.சசிகலா கடந்த மார்ச், 21-ம் தேதி ராகு-கேது பெயர்ச்சி அன்று, தனது முதற்கட்ட ஆன்மீகப் பயணத்தை தஞ்சையில் துவங்கி, திருச்சியில் முடித்தார். தொடர்ந்து, ஏப்ரல் 11 ம் தேதி தனது, 2ம் கட்ட ஆன்மிக சுற்றுப் பயணத்தை திருச்சியில் துவங்கினார். முதலில், சிவன், பிரம்மா, விஷ்ணு என மும்மூர்த்திகள் அருள்பாலிக்கும், சமயபுரம் டோல்கேட் அருகிலுள்ள உத்தமர்கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து, முசிறி அருகே திருவாசி மாற்றுரைதீஸ்வரர் கோயில், குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயில், வெள்ளூர் திருக்காமேஸ்வரர் கோயில்களில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் தரிசனம் செய்த கையோடு, எடப்பாடி, சேலம் ராஜகணபதி கோயிலில் 2-ம் கட்ட ஆன்மீக சுற்றுப் பயணத்தை நிறைவுச் செய்தார்.
இந்நிலையில், 3-ம் கட்ட ஆன்மீகப் பயணத்தை இன்று சசிகலா துவங்கியுள்ளார். இதுகுறித்து சசிகலா சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியபோது, “அரசியல் சுற்றுப் பயணத்தை விரைவில் துவங்குவேன்” என்று சூளுரைத்து, மேலும், அதிமுக பொதுச்செயலாளர் பதவி குறித்த வழக்கை மேல்முறையீடு செய்வேன் என்றும் கூறினார். இந்நிலையில், சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த சசிகலாவிடம், “தங்களது அரசியல் பயணம் தனியாகவா? அல்லது கூட்டணி கட்சிகளுடனா? என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, “பொறுத்திருந்து பாருங்கள். நான் இங்கே தானே இருக்கேன்” என்று பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், திருச்சியில் இருந்து கார் மூலம், மயிலாடுதுறை மாவட்டம் கீழப்பெரும்பள்ளம் கேது ஸ்தலத்தில் வழிபாடு செய்தார் தொடர்ந்து திருக்கடையூர் வந்தடைந்த சசிகலா, அங்கு அமிர்தகடேசுவரர், அபிராமியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து, நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலில் உள்ள சிங்காரவேலன் கோயிலில் சசிகலா சாமி தரிசனம் செய்கிறார். சூரனை சம்ஹாரம் செய்ய அன்னை பார்வதி, முருகனுக்கு வேல் எடுத்து கொடுத்த ஸ்தலம் சிக்கல். இங்கு வழிபாடு நடத்தினால் சிக்கல்கள் அனைத்தும் தீரும் என்பது ஐதீகம்.
தொடர்ந்து இரவு வேளாங்கண்ணியில் தங்கும் சசிகலா, மறுநாள் வேளாங்கண்ணி மாதா தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபடுகிறார். அதைத்தொடர்ந்து, நாகூர் ஆண்டவர் தர்காவில், சிறப்பு வழிபாடு செய்வதுடன் தனது, 3-வது கட்ட ஆன்மீகப் பயணத்தை நிறைவு செய்கிறார். 3-வது கட்டமாக மும்மத ஸ்தலங்களில் வழிபாடு நடத்தும் சசிகலா, அடுத்தகட்டமாக அதிமுகவை கைப்பற்றும் நோக்கில் தீவிர அரசியல் பயணத்தில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏரியை ஆக்கிரமித்த மேல்மருத்துவர் சித்தர் பீடம் - நீதிமன்ற உத்தரவுப்படி இடித்து தள்ளும் அதிகாரிகள்