குடியுரிமை திருத்தச் சட்டத்தின் விதிமுறைகளுக்கான அறிவிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியிடப்படாத நிலையில், மத்திய அரசு இந்தச் சட்டத்தை இரக்கம் கொண்ட ஒன்றாகவும், மேம்பட்டதாகவும் இருப்பதாகவும், எந்த ஒரு இந்தியக் குடிமகனும் இதனால் குடியுரிமையை இழக்க மாட்டார்கள் எனவும் கூறியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் தற்போதைய ஆண்டு அறிக்கையின் படி, `குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து வரும் குறிப்பிட்ட சில சமூகங்களைச் சேர்ந்த மக்களுக்குக் குறிப்பிட்ட நாள் குறிப்போடு சற்றே ஆசுவாசத்தை வழங்குவதற்காக துல்லியமாக உருவாக்கப்பட்டிருக்கும் சட்டம். இது இரக்கம் கொண்டதும், மேம்பட்டதும் ஆகும்’ எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், `குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியக் குடிமக்களுக்குப் பொருந்தாது. மேலும், இது எந்த இந்தியக் குடிமகனின் உரிமைகளையும் நீக்கிவிடாது. குடியுரிமை சட்டம் 1955-ன் படி தற்போது உள்ள விதிமுறைகள் எதுவும் மாற்றப்படாது. எந்த நாட்டையும், எந்த மதத்தைச் சேர்ந்த எவரும் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி, பதிவு செய்வதன் மூலமாக இந்தியக் குடியுரிமை பெற முடியும்’ எனவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் 12 அன்று, குடியுரிமை திருத்தச் சட்டம் அறிவிக்கப்பட்டு, ஆப்கானிஸ்தான், வங்காள தேசம், பாகிஸ்தான் முதலான நாடுகளில் இருந்து குடியேற வரும் இந்து, சீக்கிய, பௌத்த, சமண, பார்சி, கிறித்துவ மதங்களைச் சேர்ந்தோருக்குக் குடியுரிமை வழங்கும் சட்டமாக கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி 10 முதல் அமலுக்கு வந்தது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் வெடித்தன. இந்தியாவில் வாழும் முஸ்லிம்களின் குடியுரிமையை இந்தச் சட்டம் பறிக்கக்கூடும் என அச்சம் எழுந்ததால் இந்தப் போராட்டங்கள் நடைபெற்றன.
இந்தச் சட்டத்தின் விதிமுறைகள் பற்றிய அறிவிப்பு இன்னும் வெளிவராத நிலையில், இந்தச் சட்டம் முழுமையாக அமலுக்கு வராமல் உள்ளது.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆண்டு அறிக்கையின் மூலம், வட கிழக்குப் பகுதிகளில் அரசியலமைப்புச் சட்டத்தின் ஆறாவது அட்டவணையின் படி பாதுகாக்கப்படும் பகுதிகளில் இந்தச் சட்டம் அமல்படுத்தப்படாது எனவும், இந்தப் பகுதிகளில் வாழும் பழங்குடி மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் எனவும் சுட்டிக் காட்டியுள்ளது.
இவை மட்டுமின்றி, இந்த அறிக்கையில் கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்றின் போது, இந்தியாவுக்கு சுமார் 32.7 லட்சம் வெளிநாட்டுப் பயணிகள் வந்துள்ளதாகக் கூறியுள்ளது. இவர்களுள் அதிக பயணிகள் அமெரிக்காவில் இருந்து வந்துள்ளனர். 61 ஆயிரம் பயணிகள் அமெரிக்காவில் இருந்து வந்துள்ள நிலையில், அடுத்தடுத்த இடங்களில் 37 ஆயிரம் பயணிகளோடு வங்காள தேசம், 33 ஆயிரம் பயணிகளோடு பிரிட்டன், 13 ஆயிரம் பயணிகளோடு கனடா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.