நாடு முழுவதும் கடந்த ஜனவரி முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. படிப்படியாக உயர்ந்த பெட்ரோல் விலை கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்பு ரூபாய் 100-ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டது. தமிழ்நாட்டிலும் அனைத்து மாவட்டங்களிலும் பெட்ரோல் விலை ரூபாய் 100-ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 13-ந் தேதி சென்னை, கலைவாணர் அரங்கத்தில் தனது மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தனது முதல் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தது. நிதிநிலை அறிக்கையில் புதிய அறிவிப்பாக, பெட்ரோல் மீதான மாநில அரசின் வரியை ரூபாய் 3 குறைப்பதாக தனது நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பை வெளியிட்டார். அவரது அறிவிப்புக்கு பல தரப்பினரும் பெரும் வரவேற்பு அளித்தனர்.
இந்த நிலையில், தமிழக அரசு பெட்ரோல் மீதான மாநில வரியை குறைத்தது தொடர்பாக நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு பெட்ரோல் மீதான மாநில வரியை ரூபாய் 7ல் இருந்து ரூபாய் 3 ஆக குறைத்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தந்திரத்திற்கு பங்காளியாக தி.மு.க. அரசு உள்ளது என்று குற்றம் சாட்டியிருந்தார்.
அவரது பேட்டியை இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு பதிவு வெளியிட்டிருந்த மாநில நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், 2016ம் ஆண்டு முதல் மற்றும் பா.ஜ.க. கூட்டணியில் இருந்த 2020ம் ஆண்டுவரையிலான காலகட்டங்களுக்கான இடையில் அ.தி.மு.க. ரசு பெட்ரோல் மீதான வரியை லிட்டருக்கு இரண்டு கட்டங்களாக ரூபாய் 7 உயர்த்தியிருந்தது. தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது கடுமையாக எதிர்த்து வாதம் செய்தது. தற்போது தி.மு.க. அரசு அமைந்துள்ளது. மேலும், பெட்ரோல் மீதான மாநில வரியை லிட்டருக்கு ரூபாய் 3 குறைத்துள்ளது. இது தந்திரம் அல்ல. நேர்மை.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, நிர்மலா சீதாராமன் தனது பேட்டியில் எரிபொருள் மீதான சுங்கவரி குறைப்பு தற்போதைக்கு இல்லை என்றும், காங்கிரஸ் அரசு வெளியிட்ட எண்ணெய் பத்திரங்களுக்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூபாய் 70 ஆயிரத்து 195 கோடிக்கும் மேல் மத்திய அரசு வட்டி செலுத்தியுள்ளது. இன்னும் ரூபாய் 37 ஆயிரம் கோடி அளவுக்கு வட்டி செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
வட்டி செலுத்தியபோதும் ரூபாய் 1.30 லட்சம் கோடி நிலுவையில் உள்ளதாகவும், எண்ணெய் பத்திரங்களின் மீதான கடன்சுமை இல்லை என்றால் எரிபொருள் மீதான கலால் வரி குறைக்கும் நிலையில் அரசு இருந்திருக்கும் என்றும் அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.