காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உள்ளிட்ட அக்கட்சியின் 5 மூத்த தலைவர்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு சமீபத்தில் தற்காலிகமாக முடக்கப்பட்டது. மேலும், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டது. சிறிது நேரம் முடங்கி இருந்தநிலையில் பிறகு அந்த ட்விட்டர் கணக்கு மீட்கப்பட்டது. 


டெல்லியில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 9 வயது சிறுமியின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்த ராகுல் காந்தி, அந்த சந்திப்பின்போது எடுத்து கொண்ட புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டார். போக்சோ சட்டப்படி, பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படமோ, பெற்றோர், குடும்பதினரின் புகைப்படமோ சமூகவலைதளங்கள் அல்லது பத்திரிக்கைகளில் வெளியிட கூடாது. 




இது குறித்து தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் கொடுத்த புகாரின் பேரில், ராகுல் காந்தி பதிவிட்ட ட்விட்டர் பதிவு நீக்கப்பட்டது. மேலும், ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கை முடக்கிவிட்டு ட்விட்டர் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான ரந்தீப் சுர்ஜ்வாலா, முன்னாள் அமைச்சரும் பொதுச் செயலாளருமான அஜய் மக்கென், மகிளா காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ், கட்சியின் மக்களவை கொறடா மாணிக்கம் தாகூர் ஆகியோரது ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டதாக தகவல் வெளியானது.


இந்நிலையில் ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் தங்களது ட்விட்டர் பெயரை ராகுல்காந்தி என மாற்றி எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்கள் சிலர், ட்விட்டரின் லோலோவில் உள்ள குருவியை போல எண்ணெயில் பொரியல் செய்து அந்த பதார்த்தத்தை ட்விட்டர் தலைமையகத்துக்கு கொரியர் அனுப்பியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ட்விட்டர் குருவியை எண்ணெயில் பொறித்தவர் வேறு யாருமில்லை. அவர் முன்னாள் எம்பி ஹர்ஷ குமாரின் மகன் ஆவார்.