தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் 19-ந் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் நேற்று அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து, தேர்தல் நடைபெற உள்ள பகுதிகள் முழுவதும் நேற்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதையடுத்து, அரசியல் கட்சிகள் நேற்று முதலே உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கி விட்டது.


இந்த நிலையில், ஆளுங்கட்சியான தி.மு.க.வும் தனது தேர்தல் பணிகளை துரிதப்படுத்தியுள்ளது.  தி.மு.க. பொதுச்செயலாளரான துரைமுருகன் இதுதொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் மற்றும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 27-ந் தேதி ( இன்று) மாலை 6 மணிக்கு காணொலி காட்சி மூலமாக நடைபெறும். இந்தக் கூட்டத்தில், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.




மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு சந்திக்கும் முதல் உள்ளாட்சித் தேர்தல் இது என்பதால், தி.மு..க மீது பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சியான அ.தி.மு.க. மட்டுமின்றி இந்த தேர்தலில் கூட்டணி கட்சிகளே சில வார்டுகளில் எதிர்த்து போட்டியிடும் சூழல் ஏற்படுவதற்கும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளது. இதனால். இவற்றை எல்லாம் தி.மு.க. எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், சட்டசபையில் எவ்வாறு பெரும்பான்மையை கைப்பற்றினார்களோ, அதேபோல உள்ளாட்சித் தேர்தலிலும் பெரும்பான்மையை கைப்பற்ற தி.மு.க. தலைமை விரும்பும்.


இதனால், இன்று நடைபெறும் முக்கியமான கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் செயல்பாடுகள், வேட்பாளர்கள் தேர்வு, வாக்கு சேகரிப்பு முறை, பிரச்சாரம், மேயர் மற்றும் துணைமேயர் தேர்தல்கள் விவகாரம் உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்தும், மேயர்களுக்கான புதிய ஒதுக்கீட்டின்படி வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்தும் தீவிரமாக ஆலோசிக்கப்பட உள்ளது.




நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் பிப்ரவரி 22-ந் தேதி வெளியாக உள்ளது. முன்னதாக, வேட்புமனுக்கள் நாளை முதல் தாக்கல் செய்யப்பட உள்ளது. வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாள் வரும் பிப்ரவரி 4-ந் தேதி ஆகும். வேட்புமனுக்களைத் திரும்ப பெற கடைசி நாள் பிப்வரி 8-ந் தேதி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண