ரஜினிகாந்தின் புதிய திரைப்படம்


நடிகர் ரஜினிகாந்த் தற்போது 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் தமிழ்ப்புத்தாண்டு அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில்,  ரஜினிகாந்தின் அடுத்த படமான  'தலைவர் 170' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.


அதன்படி,  ரஜினிகாந்த் நடிக்கும் 'தலைவர் 170' படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இப்படத்தை 'ஜெய் பீம்' படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேல் இயக்க இருப்பதாக, லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 




ஜெய் பீம் சர்ச்சை


ஏற்கனவே ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கிய டி.ஜே. ஞானவேல் ஜெய் பீம் திரைப்படத்தில் வன்னியர்களுக்கு எதிராக திரைப்படம் எடுத்ததாகவும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடுமையான எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பொழுது நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஞானவேல் ஆகியோருக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.


சிக்கிய ஜிகே மணியின் மகன்


இந்த நிலையில் இயக்குநர் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதால் இயக்குநருக்கு எதிராக சில சர்ச்சைகள் வரலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின்  தலைவராக நியமிக்கப்பட்டு பின்பு  அப்பதிவிலிருந்து விலகிய ஜி.கே. எம் தமிழ் குமரன் மீது விமர்சனங்களை பாட்டாளி மக்கள் கட்சியினர் வைத்து வருவது தற்பொழுது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.


பாமகவை சேர்ந்த நபர்கள் இந்த திரைப்படத்தை புறக்கணிக்க வேண்டும்,  திரைப்படத்தில் மீண்டும் வன்னியர் சமுதாயத்தினர் மீது தவறாக சித்தரித்து மீண்டும் எந்த திரைப்படமும் எடுக்கக்கூடாது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.




பின்னணியில் இருக்கும் விவரம் இதுதான்


லைகா புரொடக்ஷன்ஸ் தலைமைப் பொறுப்பாளராக் உள்ள ஜி.கே.எம். தமிழ் குமரன் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் மாநில தலைவரும் தற்பொழுது பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவராக உள்ள ஜிகே மணியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்குத்தான் முன்னதாக பாமகவின் இளைஞர் அணி பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது, இந்நிலையில் அந்த பொறுப்பிலிருந்து ஜி.கே. எம் தமிழ்குமரன் விலகினார். இந்த நிலையில்தான் பாமகவினர் கடுமையாக எதிர்த்து வந்த டி.ஜே.ஞானவேல் ரஜினிகாந்தை வைத்து இயற்கை இருக்கும் திரைப்படத்திற்கு லைகா ப்ரொடக்ஷனின் தலைமை பொறுப்பாளராக உள்ள ஜி.கே மணியின் மகனே உறுதுணையாக இருப்பது பாமகவினருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.




இதுகுறித்து விவரம் அறிந்த சிலர் கூறுகையில், "கட்சியில் ஏற்கனவே அவருக்கு நற்பெயர் இல்லை எனவும், அதேபோல் ஜிகே மணியின் மகன் இளைஞர் அணி பொறுப்பில் வந்ததை தொண்டர்களும் விரும்பவில்லை அதனால்தான் அவர் அந்த பதிவில் இருந்து விலகினார். இந்த நிலையில் பாமகவினர் கடுமையாக எதிர்த்த ஒரு இயக்குநரை அவர் கொண்டாடுவது, எந்த விதத்திலும் ஏற்படுவதில்லை என்பதால்தான் இந்த கடுமையான எதிர்ப்பு கிளம்பி உள்ளது" என தெரிவித்தனர்.


சமூக வலைத்தளத்தில் பாமகவினர் தொடர்ந்து ஜிகே மணியின் மகனை வம்பு இழுத்து வரும் நிலையில், திரைப்படம் மட்டுமே இதற்கு காரணம் இருக்காது, பின்னணியில் வேற ஏதாவது காரணம் இருக்கும் எனவும் கூறுகின்றனர் விபரம் அடைந்தவர்கள்.