முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் காலத்தில் தளபதியாக முன்னின்றார், முக ஸ்டாலின், தளபதியோ தற்போது தலைவராகிவிட, முக ஸ்டாலினின் தளபதிகளில் முக்கியமானவராக பார்க்கபடும் செந்தில் பாலாஜி 2-வது முறையாக மீண்டும் அதிமுகவை அதன் கோட்டையிலேயே சரித்திருக்கிறார்.


சட்டமன்ற தேர்தலில் கோவையின் 10 தொகுதிகளையும் கைப்பற்றி, கோவை எங்கள் கோட்டை என்று மார்தட்டிய அதிமுகவை சிதறடிக்க, கோவை மாவட்டத்தின் பொறுப்பாளராக அமைச்சர் செந்தில் பாலாஜி களமிறக்கினார் முதலமைச்சர் ஸ்டாலின். இறங்கிய வேகத்தில் சிக்ஸர் அடிக்க தொடங்கினார் செந்தில் பாலாஜி, பிரமாண்ட கூட்டம்... கட்சி நிர்வாகிகளின் அதிரடி மாற்றம்.. அடிக்கடி ஸ்டாலின், உதயநிதி ஆகியோரை கோவைக்கு வரவழைப்பது, திட்டங்களை துவங்கி வைப்பது என என்ன நடக்கிறது என்பதை கோவை திமுகவும், அதிமுகவும் புரிந்துகொள்வதற்கு முன்பே, கோவையில் தன் அசைவின்றி எதுவும் நடக்காது என்னும் நிலையை உருவாக்கினார் செந்தில்பாலாஜி.


அவரின் முதல் ரியல் டெஸ்ட் உள்ளாட்சி தேர்தல், கோவையின் ஆளுமை எஸ்.பி வேலுமணியின் வார்டிலேயே திமுக வேட்பாளரை வெற்றிபெற வைத்தார். கோவை மேயராக கல்பானாவை தேர்வு செய்து இத்தனை ஆண்டுகால வரலாற்றையும் மாற்றினார்.


இந்நிலையில் ஈரோடு கிழக்கின் MLA திருமகன் ஈவெரா மறைய, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. கொங்கு மண்டலத்தில் பலம் பொருந்திய அதிமுக, தமிழ் மாநில காங்கிரஸை ஓரம்கட்டிவிட்டு நேரடியாக களத்தில் குதித்தது. முன்னாள் முதல்வர் எடப்பாடி நிச்சயம் நம்மால் வெற்றி பெற முடியும் என நம்பினார்.


அதே நேரம் காங்கிரஸின் ஈவிகேஸ் இலங்கோவனை வேட்பாளராக நிறுத்திய ஸ்டாலின், 50000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற அசைன்மெண்டுடன் 12 அமைச்சர்கள், 19 மாவட்ட செயலாளர்களை களமிறக்கினார். அதிமுகவும் முன்னாள் அமைச்சர்களை களமிறக்க சாதாரண ஒரு இடைத்தேர்தலை, நிஜ சட்டமன்ற தேர்தலை காட்டிலும் சீரியஸாக எடுத்துக்கொண்டன இரு கட்சிகளும்.


அதில் கோவை மாவட்டத்தில் பொறுப்பாளராக இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க், அதிமுகவின் பலம் வாய்ந்த வார்டுகளாக கருதப்படும் வீரப்பன்சத்திரம் உள்ளிட்ட 17, 18 மற்றும் 23வது வார்டுகள் ஒதுக்கப்பட்டன. அறிவிப்பு வந்த அடுத்த நொடியே, கரூர், கோவை திமுகவினரை ஈரோடு கிழக்கில் களமிறக்கினார் செந்தில் பாலாஜி. கையில் லேப்டாப், பிரிண்டர் என கார்ப்பரேட் கம்பெனி போன்று 3 வார்டுகளிலும் மினி அலுவலகம் அமைக்கப்பட்டது.


20 வாக்காளர்களுக்கு ஒரு பொறுப்பாளரை நியமித்தார் செந்தில்பாலாஜி, பேண்ட் ஷர்ட் போட்டுக்கொண்டு, அனைத்து அலுவலகத்திற்கும் தினசரி விசிட் அடிப்பது, கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசிப்பது என பம்பரமாய் சுழலத் தொடங்கினார். இவரின் வேகத்தை கண்ட காங்கிரஸ் எலெக்ஷன் ஸ்பெஷலிஸ்ட் என இவரை அழைக்க, திக்குமுக்காடி போனது அதிமுக.


மக்களை பட்டிபோல அடைத்து வைத்து, அதிமுக பிரச்சாரம் செய்ய வரும் நேரங்களில் அங்கு யாருமே இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. திமுக சார்பில் வாக்காளர்களுக்கு பணம், ஸ்மார்ட் வாட்ச், வேஷ்டி, சேலை, குக்கர், வெள்ளி குங்கும சிமிழ், கொலுசு உள்ளிட்டவை வழங்கப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கபட்டன. அதிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாக்காளர்களுக்கு சிக்கன், மட்டன் வழங்கப்படுவதாக விமர்சனங்களை அள்ளி வீசின எதிர்க்கட்சிகள். 


இங்கு தொடங்கிய சில பார்முலாக்கள், பின்னர் அனைத்து வார்டுகளுக்குமே பரவியதாகவும் சொல்லப்பட்டது.  விமர்சனமின்றி அரசியல் இல்லை, ஆனால் இறுதியில் பேசப்படுவது வரலாற்றில் வெற்றி தோல்வி மட்டுமே. அந்த வகையில் அதிமுக சக்திபடைத்த 3 வார்டுகளில் ஓட்டுகளை திமுக பக்கம் திருப்பி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை வெற்றி பெற வைத்து, மீண்டும் அதிமுகவை சரித்துள்ளார் இந்த கரூர்காரர்.


“செந்தில் பாலாஜி ஒரு செயலில் இறங்கினால், அது பாராட்டுக்குரியதாகத்தான் அமையும். `சரியான ஆளைத்தான் பொறுப்பாளரா போட்டுருக்கீங்க. கட்சி இப்போது கொங்கு மண்டலத்துல கம்பீரமா நிமிர்ந்து நிக்குது’ என பொள்ளாச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிய வார்த்தைகளை மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளார் செந்தில்பாலாஜி.