வேலையில்லா திண்டாட்டம் நாட்டை உலுக்கி வருகிறது. இந்தியப் பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் (CMIE) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் வேலையின்மை விகிதம் 8.3% ஆக உயர்ந்துள்ளது. கடந்த 12 மாதங்களில் இதுவே அதிக வேலையின்மை விகிதம் ஆகும். ஆகஸ்ட் 2021இல், வேலையின்மை விகிதம் 8.35% ஆக இருந்தது.
இதையடுத்து, கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் தொழிலாளர் பங்கேற்பு அதிகரிப்பின் காரணமாக செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் வேலையின்மை விகிதம் 6.43 சதவீதமாக குறைந்துள்ளது என CMIE தெரிவித்திருந்தது.
இதுகுறித்து CMIE நிர்வாக இயக்குனர் மகேஷ் வியாஸ் கூறுகையில், "செப்டம்பரில் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் தொழிலாளர் பங்கேற்பு அதிகரித்தன் விளைவாக வேலையின்மை விகிதம் கணிசமாக குறைந்துள்ளது" என்றார்.
ஆகஸ்ட் மாதத்தில் கிராமப்புறங்களில் 7.68 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம் செப்டம்பரில் 5.84 சதவீதமாகக் குறைந்துள்ளது. நகர்ப்புறங்களில் இது முந்தைய மாதத்தில் பதிவான 9.57 சதவீதத்திலிருந்து 7.70 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப, சிதம்பரம், வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்பாக மத்திய அரசை இன்று விமர்சித்துள்ளார். எட்டு ஆண்டு கால மோடி ஆட்சியின் விளைவு வேலையின்மையே என அவர் குற்றம் சாட்டியுள்ளார். வேலை இல்லாமல் இளைஞர்கள் தவித்து வருவதையும் அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டத்தை முன்வைத்து காங்கிரஸ் தொடர்ந்து விமர்சித்து வருகிறது.
"உத்தரபிரதேசத்தில் 37 லட்சம் பேர் கிரேடு 'சி' வேலைகளுக்காக விண்ணப்பித்துள்ளனர். 40,000 அக்னிவீர் வேலைக்காக 35 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 'நாங்கள் விரக்தியில் இருக்கிறோம், எங்களுக்கு வேறு வழியில்லை' என்ற இளைஞர்களின் வேதனைக் குரலுக்கு அரசாங்கம் செவிசாய்க்கிறதா?
8 ஆண்டுகளுக்குப் பிறகு மோடி அரசு ஏற்படுத்தியது இதுதான்: வேலை இல்லை. வேலையின்மை விகிதம் 8 சதவீதமாக உள்ளது (தவறான தரவுகளின் அடிப்படையில் வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது). நிதி அமைச்சகத்தின் செப்டம்பர் மாத மதிப்பாய்வில் வேலையில்லா திண்டாட்டம் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை!" என முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அரசின் கொள்கைகளால் நாட்டின் பொருளாதார நிலை மோசமாகிவிட்டதாக சிதம்பரம் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.