புதுச்சேரி : யு.டி.சி., பணியிடத்தை தொடர்ந்து அசிஸ்டண்ட் மற்றும் எல்.டி.சி., என 424 பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகளை நிர்வாக சீர்திருத்த துறை நடவடிக்கை, புதுச்சேரியில் மருத்துவம், பொறியியல், பல் மருத்துவம், கால்நடை மருத்துவம், நர்சிங், பாரா மெடிக்கல், விவசாயம், சட்டம், பி.எட்., கேட்டரிங், கலை மற்றும் அறிவியல் என மொத்தம் 145 கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றில், அரசு கல்லுாரிகளின் எண்ணிக்கை 38; தனியார் கல்லுாரிகள் 107 ஆகும். புதுச்சேரியில் உள்ள கல்லுாரிகளில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பட்டப் படிப்பையும், பட்ட மேற்படிப்பையும் முடித்துவிட்டு பட்டதாரிகளாக வெளியே வருகின்றனர்.
உயர் கல்வி மையமாக திகழும் புதுச்சேரியில், அரசு வேலைவாய்ப்பு என்பது கடந்த பத்து ஆண்டுகளாக எட்டாக் கனியாக மாறிவிட்டது. அரசு பணியிடங்களில் காலி பணியிடங்கள் அவ்வப்போது ஏற்பட்டபோதும், வழக்கு, பணி நியமன விதி திருத்தம், நிதி நெருக்கடி காரணமாக நிரப்பப்படவில்லை. இதனால் அரசு துறைகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த காலி பணியிடங்களை நிரப்பிட தற்போதைய அரச முடிவு செய்துள்ளது. அதனையொட்டி, முதற்கட்டமாக 116 யு.டி.சி., பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டது. இப்பணிக்கு இதுவரை 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துளனர். வரும் 31ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் உள்ளது. இந்நிலையில் அடுத்தக் கட்டமாக 259 அசிஸ்டண்ட் மற்றும் 165 எல்.டி.சி., பணியிடங்களை நேரடியாக நிரப்ப நிர்வாக சீர்திருத்த துறை தயாராகி வருகிறது.
எல்.டி.சி.,பணியிடத்திற்கான விண்ணப்பம் வரும் 1ம் தேதியும், அசிஸ்டண்ட் பணியிடங்களுக்கான விண்ணப்பம் 10ம் தேதி முதலும் வரவேற்க நிர்வாக சீர்த்திருத்த துறை இலக்கு வைத்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. யூ..டி.சி.,பணியிடங்கள் போல, விண்ணப்பங்கள் ஆன்லைனில் வரவேற்க திட்டமிட்டுள்ளதால் தேசிய தகவலியல் மைய போர்ட்டல் ரெடியாக வைத்திருக்க நிர்வாக சீர்த்திருத்த துறை உத்தரவிட்டுள்ளது. எனவே தேசிய தகவலியல் மையமும் இணையதளத்தில் விண்ணப்பங்களை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை முழு வீச்சில் தொடங்கப்பட்டுள்ளது.
யூ.டி.சி.,பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்காக வருவாய் துறை அலுவலங்களில், குடியிருப்பு ,ஜாதி சான்றிதழ்களை கேட்டு இளைஞர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் கிராம நிர்வாக அலுவலகம், தாசில்தார் அலுவலகங்களில் கூட்டம் அலை மோதுகிறது. இதேபோல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு கேட்டும், இளைஞர்கள் குவிந்ததால், வேலைவாய்ப்பு அலுவலகமும் திணற துவங்கியது. மேலும், 424 எல்.டி.சி., அசிஸ்டண்ட் அரசு ஊழியர் பணியிட அறிவிப்பு வெளியாக உள்ளதால், இன்னும் இளைஞர்கள் கூட்டம் குவிந்து, ஒட்டுமொத்த அலுவலகங்களும் திணற துவங்கிவிடும். எனவே போட்டி தேர்வில் தேர்ந்தெடுக்கப்படும் எல்.டி.சி., அசிஸ்டண்டுகளுக்கு மட்டும் குடியிருப்பு, ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு பதிவு கோர வேண்டும்.