அதிமுக பொதுக்குழுவுக்கு இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி காரில் வந்த நிலையில், ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பிரச்சார வேனில் வந்து இறங்கினார். வேன் டிரைவரை ஈபிஎஸ் கோஷ்டி மிரட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதிமுகவில் தலைமை மீதான போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. இந்த வழக்கில் மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி பொதுக்குழுக்கூட்டம் நடத்த அனுமதியளித்தார். இதனைத்தொடர்ந்து மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூட்டத்தில் 23 தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானத்தையும் நிறைவேற்ற கூடாது என்று உத்தரவிட்டனர்.
அதேசமயம் பொதுக்குழு தொடர்பான வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறோம். ஆனால் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் மாற்றுக்கருத்து இல்லை. மேல்முறையீடு செய்வது குறித்து தலைமை அறிவிக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.
இதனிடையே இன்று பொதுக்குழு கூட்டம் நடைபெறும் வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்திற்கு பொதுக்குழு உறுப்பினர்கள் வந்த வண்ணம் உள்ளனர். பொதுக்குழுவில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க ஸ்ரீவாரு மண்டபத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பிரச்சார வேனில் வந்து இறங்கிய ஓபிஎஸ்
இதற்கிடையே ஓபிஎஸ், ஈபிஎஸ் இரண்டு தரப்பினரும் தனித்தனியாக ஸ்ரீவாரு மண்டபத்திற்குப் புறப்பட்டு வந்தனர். எடப்பாடி பழனிசாமி இன்னோவா காரில் புறப்பட்டு வரும் நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சார வேனில் வந்து இறங்கினார்.
வழக்கமாக இன்னோவா காரில் ஓபிஎஸ் பயணிக்கும் நிலையில், பிரச்சார வேனைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம் என்று கேள்வி எழுந்தது. இதுகுறித்து விசாரித்தபோது, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான நபர்கள் தாக்குதலை முன்னெடுக்கலாம் என்று தகவல் வெளியானது. இதையடுத்து பாதுகாப்பு முன்னேற்பாடுகளுக்காக, தேனியில் இருந்து இரவோடு, இரவாக நள்ளிரவில் பிரச்சார வேன் வரவழைக்கப்பட்டது.
ஜெ. பாணியில் ஓபிஎஸ்
அதேபோல அதிமுக பொதுக்குழு கூட்டங்களுக்கு ஜெயலலிதா பிரச்சார வேனைப் பயன்படுத்துவது வழக்கம். அந்த வகையில் ஜெயலலிதாவைப் பின்பற்றியே ஓபிஎஸ் பிரச்சார வேனைப் பயன்படுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், பொதுக்குழுவுக்கு மஞ்சள் வேட்டி வெள்ளை சட்டையில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வருகை தந்துள்ளார்.
மிரட்டிய ஈபிஎஸ் கோஷ்டி
ஓ.பன்னீர் செல்வம் வந்த பிரச்சார வாகனத்தை அரங்குக்கு உள்ளே நிறுத்தக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். வேனை பலமாகத் தட்டி வெளியே கொண்டு போ என்று டிரைவரை மிரட்டினர்.
இதனையடுத்து, டிரைவர் பயந்துபோய் வண்டியை பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வெளியே வண்டியை எடுத்துச் சென்றார்.
அப்போதும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களான துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், வேலுமணி, தங்கமணி ஆகியோர் கண்டும் காணாமல் அமைதியாக நாற்காலியில் அமர்ந்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.