எடப்பாடி பழனிசாமியையும் பன்னீர்செல்வத்தையும் இனி எந்தப் பசையாலும் ஒட்ட வைக்கமுடியாது என மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் பேட்டியளித்துள்ளார்.
ஓபிஎஸ் ஈபிஎஸ் மோதல் குறித்து மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியன் பேசும் போது, “ பொதுக்குழு கூட்டத்தில் பெரும்பான்மையான தொண்டர்களின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கே இருப்பதை பார்க்க முடிகிறது. அந்த ஆதரவை அவர் எப்படி பெற்றார், அதற்கு அவர் கையாண்ட வழிகள் என்ன உள்ளிட்டவற்றில் என்பதில் எனக்கு கருத்துவேறுபாடு இருக்கிறது. ஆனால் ஒரு கட்சியின் பொதுக்குழுவின் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிடுவதை உள்கட்சி ஜனநாயகத்திற்கு எதிரானதாக பார்க்கிறேன். அது சரியான பார்வையாக தெரியவில்லை. காரணம் பொதுக்குழுதான் ஒரு கட்சியின் உச்சபட்ச அமைப்பு.
ஓபிஎஸ் பொதுக்குழுவில் கலந்து கொள்கிறார் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. ஆனால் பொதுக்குழு கூட்டத்தில் பெரும்பான்மையாக ஈபிஎஸ் ஆதரவாளர்களே இருக்கின்றனர். அதனால் அங்கு எப்படியான சூழ்நிலை நிலவும் என்பதை ஊகிக்கவே முடியவில்லை. காரணம் சிறுபொறி கூட நெருப்பாக மாறிவிடும். அந்த சூழ்நிலையை ஊகிக்கும் போதே கொஞ்சம் பயமாக இருக்கிறது. ஜெயகுமார் போன்றவர்கள் இந்த பிரச்சினையை ஊதி பெரிதாக்குகிறார்கள். காரணம் அங்கு ஈபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு மாறி மாறி கோஷங்களை எழுப்பும் போது, மோதல் வரவாய்ப்பு இருக்கிறது.
எடப்பாடியின் நகர்வு
எடப்பாடி பழனிசாமியின் நகர்வை பொருத்தவரை, இந்த தீர்ப்பை எதிர்த்து ஈபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுக்குழு கூட்டத்தில் நிச்சயமாக ஒற்றைத்தலைமை குறித்தான விவாதங்கள் நடைபெறும். எடப்பாடியின் ஆதரவாளர்கள் நிச்சயம் இந்த விவகாரத்தை எழுப்புவார்கள். ஆனால் இதனை சிறுபான்மையாக இருக்கும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் என்பதை பொதுக்குழு கூட்டத்தின் சூழ்நிலைதான் முடிவு செய்யும்.
ஓபிஎஸ்க்கும் ஈபிஎஸ்ஸூக்கும் இடையே பிளவு ஏற்பட்டு விட்டது. இனி அவர்கள் நிச்சயம் ஒன்றாக சேர மாட்டார்கள். எந்த ஃபெவிகால் வைத்தும் அவர்களை இனி ஒட்ட வைக்க முடியாது. மக்கள் முன் செல்வாக்கை நிரூபித்து அதன் மூலமாக அரங்கேறும் ஒற்றுமைதான் கட்சியை காப்பாற்றும்” என்றார்.