அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் பூதாகார பிரச்சினையாக உருவெடுத்திருக்கும் நிலையில் இன்று பொதுக்குழு கூட்டம் கூடும் நிலையில் உறுப்பினர்கள் அனைவரும் வருகை தர தொடங்கியுள்ளனர். 


அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. இந்த வழக்கில் மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி பொதுக்குழுக்கூட்டம் நடத்த அனுமதியளித்தார். இதனைத்தொடர்ந்து மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூட்டத்தில் 23 தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானத்தையும் நிறைவேற்ற கூடாது என்று உத்தரவிட்டனர். 


இதனிடையே இன்று பொதுக்குழு கூட்டம் நடைபெறும் வானகரம் ஸ்ரீவாரி மண்டபத்திற்கு பொதுக்குழு உறுப்பினர்கள் வந்த வண்ணம் உள்ளனர். பொதுக்குழுவில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க ஸ்ரீவாரு மண்டபத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  அதிமுக பொதுக்குழுவுக்கு மஞ்சள் வேட்டி வெள்ளை சட்டையில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்  வருகை தந்துள்ளார். 


அதேசமயம் பொதுக்குழு தொடர்பான வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறோம். ஆனால் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் மாற்றுக்கருத்து இல்லை. மேல்முறையீடு செய்வது குறித்து தலைமை அறிவிக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் கூட்டத்தில் பங்கேற்க வந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தல்கள் 100% கடைபிடிக்கப்படும் என்றும், தீர்ப்பினால் எந்த பின்னடைவும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அதிமுகவில் ஒரு தேக்கநிலை ஏற்பட்டிருப்பதாக அனைவரும் கருதுவதாகவும், அதன் அடிப்படையிலேயே கருத்து தெரிவிக்கிறார்கள். எனவே இயக்கத்தின் வளர்ச்சிக்காக இரு தலைவர்களிடமும் முறையிட்டுள்ளோம். அவர்கள் எங்களுக்கு நல்ல வழியைக் காட்டுவார்கள். 


ஒற்றை தலைமை குறித்து எதிர்காலத்தில் மீண்டும் வலியுறுத்தப்படுமா என்ற கேள்விக்கு, அதிமுவின் வளர்ச்சிக்கும், எதிர்கால நலனுக்கும்,தொண்டர்களை காப்பதற்கும் கடந்த கால அனுபவங்களை கருத்தில் கொண்டு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் நல்ல முடிவை அறிவிப்பார் என தான் எதிர்பார்ப்பதாக ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கூட்டம் நடைபெறும் அரங்கினுள் ஓ.பன்னீர்செல்வம் நுழைந்த போது ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி அவருக்கு எதிராக எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.