முன்னாள் முதலமைச்சரும், அதிமுக தொண்டர்கள் ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான ஓ. பன்னிர்செல்வம் இன்று திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இதனால், அரசியல் வட்டாரத்தில் பல கேள்விகள் எழுந்துள்ள. அவர் பாஜக உடன் மீண்டும் சேரப் போகிறாரா அல்லது தனி கட்சி தொடங்கப் போகிறாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Continues below advertisement

நவ.24-ம் தேதி நடந்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

அதிமுக ஒருங்கிணைப்புக் குழு தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், கடந்த 24-ம் தேதி சென்னை வேப்பேரியில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு கூட்டத்தை நடத்தினார்.

அந்த கூட்டத்தில் பேசிய ஓ. பன்னீர்செல்வம், கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல்களில் அதிமுக தொடர்ந்து தோல்விகளை சந்தித்துள்ளதாக கூறினார். மேலும், அதிமுகவின் இந்த நிலையை பார்த்து கண்ணீர் விடும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Continues below advertisement

அதிமுகவை ஒருங்கிணைக்க கெடு

தொடர்ந்து, அந்த கூட்டத்தில் பேசும்போது, வரும் டிசம்பர் 15-ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்ட உள்ளதாகவும், அதனால், டிசம்பர் 15-ம் தேதிக்குள் அதிமுக ஒருங்கிணைப்பை நடத்தி, இனியாவது திருந்த வேண்டும், இல்லாவிட்டால் திருத்தப்படுவீர்கள் என்று கூறினார்.

அதோடு, “எங்கள் முடிவை மக்கள் ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு எங்களை தள்ளி விடாதீர்கள்“ என்றும் ஓ. பன்னீர்செல்வம் கூறியிருந்தார்.

ஓ. பன்னீர்செல்வம் திடீர் டெல்லி பயணம்

இந்த நிலையில் தான், இன்று திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார் ஓ. பன்னீர்செல்வம். அங்கு 2 நாட்கள் முகாமிட்டு, பாஜக மூத்த தலைவர்களை அவர் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அவர் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்வதற்கு முயல்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே, துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியும் இன்று டெல்லி சென்றுள்ளதால், ஓ. பன்னீர்செல்வத்தின் பயணம் உற்று நோக்கப்படுகிறது.

ஆனால், டெல்லியில் பாஜக தலைவர்கள் யாருடைய சந்திப்பிற்கும் ஓபிஎஸ்-க்கு அனுமதி கிடைக்கவில்லை என்ற தகவலும் மறுபுறம் வெளியாகியுள்ளது.

தனி கட்சி தொடங்குகிறாரா ஓபிஎஸ்.?

அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சியில் எந்த பலனும் கிடைக்காத நிலையிலும், வேறு எந்த கூட்டணியிலும் இடம் கிடைக்காத நிலையிலும், ஓ. பன்னீர்செல்வம் தனிக் கட்சி தொடங்கப் போகிறாரா என்ற எதிர்பார்ப்பும் ஒருபுறம் இல்லாமலும் இல்லை. சொல்லப் போனால், அதற்கான ஆவணங்கள் சரிபார்ப்பிற்காகவே அவர் டெல்லி சென்றுள்ளதாகவும் ஒரு தகவல் உலா வருகிறது.

யாருக்கு பாதிப்பு ஏற்படும்.?

டெல்லி சென்றுள்ள ஓ. பன்னீர்செல்வம், ஒரு வேளை தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் சேர்ந்தால், அதிமுகவிற்கான வாக்குகள் என்ன ஆகும் என்ற கேள்வி ஒரு பக்கம் இருக்கிறது. இன்றைய சூழலில், ஓ. பன்னீர்செல்வத்திற்கு பெரிய ஆதரவு ஏதும் இல்லை என்றாலும், பாஜக-அதிமுக கூட்டணியில் உள்ளதால், அவரது வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் அதிமுக தொண்டர்களின் ஆதரவு கிடைக்கும் என்றே கூறலாம்.

அப்படி இல்லாமல், ஒரு வேளை தனிக் கட்சி தொடங்கினால், நிச்சயம் ஏதாவது ஒரு கூட்டணியை நோக்கியே அவர் செல்ல வேண்டும். அப்படி, தவெக-விற்கு செல்ல அவர் முயற்சித்தால், அதிமுக தொண்டர்களின் ஆதரவு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. ஒருவேளை விஜய்க்கு இருக்கும் ஆதரவு, இவர் பக்கமும் திரும்பினால் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அப்படி நிகழ்ந்தால், அதிமுகவிற்கு அது நிச்சம் சிறிய பாதிப்பை ஏற்படுத்தலாம்.ஹ

மொத்தத்தில், 2 நாட்கள் கழித்து, ஓ. பன்னீர்செல்வம் திரும்பும் போதுதான், நமது கேள்விகளுக்கான விடை கிடைக்கும். பொறுத்திருப்போம்...