காஞ்சிபுரத்தில் ஓபிஎஸ் அணியினர் நடத்தும் பொதுக்கூட்டத்தில் அதிமுக கொடி சின்னம் பயன்படுத்துவதை தடை செய்யக்கோரி காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் அதிமுகவினர் மீண்டும் புகார் மனு.
ஓபிஎஸ் புரட்சி பயணம்
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது அணியினர் சார்பில் காஞ்சிபுரம் அருகே களியனூர் பகுதியில் புரட்சி பயணம் தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி புரட்சி பயணத்தை தொடங்குகிறார். இந்த பொதுக்கூட்டத்தை ஒட்டி காஞ்சிபுரம் வாலாஜாபாத் சாலை களியனுர் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக கொடிகளும் பேனர்களும் வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் எதிர்ப்பு
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் வி. சோமசுந்தரம் தலைமையில் அதிமுக நிர்வாகிகள், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் அணியினர் நடத்தும் பொதுக்கூட்டத்தில் அதிமுக கொடியையும் கட்சி சின்னங்களையும் பயன்படுத்தக் கூடாது என காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனுவினை அளித்திருந்தனர். இருப்பினும் இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
"மீண்டும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்த அதிமுக "
இந்நிலையில் பொதுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் முற்றிலும் நிறைவடைந்து இன்று மாலை பொதுக்கூட்டம் நடைபெற உள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா. கணேசன் தலைமையில் காவல்துறை கண்காணிப்பாளர் , டாக்டர் மா. சுதாகர் அவர்களை சந்தித்து ஓபிஎஸ் அணியினர் அதிமுக கட்சியை கொடியையும் பேனர்களையும் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என கோரி புகார் மனுவை அளித்து உள்ளனர்.
கொடிய பயன்படுத்த தடை
அவர்கள் அளித்துள்ள புகார் மனுவில், தமிழக எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி. கே . பழனிச்சாமியை உயர் நீதிமன்றமும் தலைமை தேர்தல் ஆணையமும் அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்துள்ளதாகவும், ஓ. பன்னீர்செல்வத்தை அதிமுகவிலிருந்து நீக்கியது செல்லும் எனவும் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் , கட்சியின் பொதுக்குழு முடிவே இறுதியானது என்றும், ஓபிஎஸ் அணியினர் அதிமுக கொடி சின்னம் பயன்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை அடுத்து வீடியோ காட்சிகளுடன் மீண்டும் புகார் மனு அளித்துள்ளோம் எனவும், அதனால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
முன்னதாக, நேற்று காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் அணியின் துணை ஒருங்கிணைப்பாளர் ஜே.சி.டி பிரபாகர் இதுகுறித்து பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து பேசுகையில், நீதிமன்றம் கட்சி கொடியையும், சின்னத்தையும் பயன்படுத்தக் கூடாது என்று எங்கேயும் தெரிவிக்கவில்லை என கூறினார்.