அதிமுக அலுவலகத்திற்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியிருந்த நிலையில் ஓபிஎஸ் தரப்பு பதில் கடிதம் அனுப்பியுள்ளார். தேர்தல் அதிகாரி நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக சார்பில் கோவை செல்வராஜ் கலந்து கொள்வார் என ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.
நாளை மறுதினம் அதாவது வரும் திங்கட்கிழமை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த இருக்கிறது. மேலும், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணி தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது.
முன்பாக, ஈபிஎஸ் தரப்பில் ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொள்வார்கள் என தகவல் வெளியானது. வருகிற 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதிக்கு முன்பாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைத்து வாக்காளர்களின் ஆதார் எண்கள் பெறப்படும். இப்பணி வருகிற ஆகஸ்டு 1 ம் தேதி (திங்கட்கிழமை) முதல் தொடங்க உள்ளது. வாக்காளர்கள் அவர்களின் ஆதார் எண் விவரங்களை 6B என்ற படிவத்தை பயன்படுத்தி அளிக்க வேண்டும். இப்படிவத்தை, தேர்தல் கமிஷன் இணையதளத்தில் வெளியிட்டு, 'ஆன்லைன்' வழியாக ஆதார் எண் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. ஓட்டுச்சாவடி அலுவலர் வீடு வீடாகச் சென்று, வாக்காளர்களிடம் படிவம் 6 பி வழங்கி, ஆதார் எண் பெறவும், சிறப்பு முகாம்கள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும், ஆதார் எண் இணைப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆதார் எண் தர இயலாதவர் பெயர்களை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கக் கூடாது என்றும், தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது.வாக்காளர் அட்டையுடன், ஆதார் எண் இணைக்கப்பட்டால், கள்ள ஓட்டுப்பதிவை குறைக்க முடியும் எனவும் ஏற்கனவே தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில், மாவட்ட தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் விரைவில் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதற்கு முன்னதாக வரும் திங்கட் கிழமை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த இருக்கிறது.