சமீபத்தில் டெல்லி பயணத்தை முடித்துவிட்டு திரும்பிய ஆளுநர் தலைமை செயலாளர் இறையன்புவிடம், நலத்திட்டங்கள் குறித்த விவரங்களை கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தமிழக தலைமை செயலாளர் இறையன்பு அரசு துறை செயலாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். அதில், “மத்திய மாநில அரசுகளின் நலத்திட்ட விவரங்களை ஆளுநருக்கு சமர்ப்பிக்க அரசு துறை செயலாளர்கள் தயாராக இருக்க வேண்டும். அதற்கான காலம் பின்னர் அறிவிக்கப்படும்” என குறிப்பிட்டிருந்தார். அவரது இந்த சுற்றறிக்கை தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த அதிமுக ஆட்சியில் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் செய்த ஆய்வுக்கு திமுக தரப்பிலிருந்து கடுமையான எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி மத்தியில் ஆளும் பாஜக அரசின் கை பாவையாக அதிமுக அரசு இருப்பதாகவும், மாநில சுயாட்சியை அடகு வைப்பதாகவும் திமுக தரப்பில் அதிமுக அரசு மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது.


குறிப்பாக, அன்றைய எதிர்கட்சி தலைவராக இருந்த திமுக தலைவர் ஸ்டாலின் பதிவிட்ட ட்விட் ஒன்றில் இருந்த வாசகங்களை தற்போது மீண்டும் தோண்டி எடுத்து எதிர்கட்சிகள் விமர்சித்து பகிர்ந்து வருகின்றனர். 2017 நவம்பர் 15ம் தேதி ஸ்டாலின் பதிவிட்ட ட்விட்டரில் அப்படி என்ன வாசம் இருந்தது?  இதோ....


‛‛மாநில உரிமைகளை தொடர்ந்து பறிக்கும் மத்திய #BJP அரசின் அடுத்தகட்ட நடவடிக்கையாக #TNGovernor கோவையில் அதிகாரிகளோடு ஆய்வு மேற்கொண்டிருப்பது அரசியல் சட்டவிரோத முயற்சி. ‘பொம்மை அரசை’ வைத்துக்கொண்டு ஆளுநர் மூலம் நிர்வாகம் செய்திடலாம் என்கிற #BJP ன் திட்டம் இதன்மூலம் உறுதியாகியுள்ளது’’






இது தான் ஸ்டாலின் பதிவிட்ட ட்விட்டர் பதிவு. தற்போது இந்த ட்விட்டர் பதிவை தோண்டி எடுத்து, அன்று அப்படி சொன்னீர்களே... இன்று உங்கள் அரசில் ஆளுநர் ஆய்வு செய்யப் போகிறார், அதற்கு தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார் என்று விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.



இது ஒருபுறமிருக்க... தனது சுற்றறிக்கை அரசியல் ரீதியாக விமர்சிக்கப்படுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தலைமைச் செயலாளர் இறையன்பு, இது வழக்கமான நடைமுறை தான் என்றும் விளக்கம் அளித்திருக்கிறார்.