அதிமுக முன்னாள் மூத்த அமைச்சர்களுடன் ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்த எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போ அவர் பேசியது...




 


அதிமுக முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் மீது தொடர்ந்து பொய் வழக்கு போடப்பட்டு வருகிறது. ஊழல், வசூல் செய்வதை மட்டும் தான் இன்றைய அரசு செய்கிறது. கரெப்ஷன், கலெக்ஷன்,  வென்டட்டா(பழிவாங்குவதை) மட்டும் தான் திமுக செய்கிறது. இது தான் அவர்களது 100 நாள் சாதனை. திமுக அரசு பொறுப்பேற்ற 100 நாளில் மக்கள் வேதனையும், சோதனையும் தான் அடைந்திருக்கிறார்கள். நாங்கள் செய்த வளர்ச்சி திட்டங்களை திமுக கிடப்பில் போட்டுள்ளது. ஆட்சி பொறுப்பேற்று வந்து எந்த பணியும் செய்யாமல் முடங்கியுள்ளது. இது தான் திமுகவின் சாதனை. ஏற்கனவே முடிக்கப்பட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை. ஆளுங்கட்சியினர் அதில் அதிகாரம் செலுத்தி, தாங்கள் தான் அந்த பணியை செய்ய வேண்டும் என கிராமப்புற வேலைவாய்ப்பை தடுத்துள்ளனர். முன்பு திமுக ஆளுங்கட்சியாக இருந்த போது, 13 அமைச்சர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதை வேகமாக முடிக்க திமுக செயல்படுகிறது. அதை மறைக்க முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வேலுமணி மீது வழக்கு பதிவு செய்து அவசூறு பரப்புகிறார்கள். 




சயன் கூட்டாளிகள் அத்துமீறி கொள்ளையடித்து, காவலாளியை கொலை செய்திருக்கிறார்கள். அது விசாரணை முடிந்துவிட்டது. அதை மீண்டும் விசாரிப்பது தேர்தல் அறிக்கை என முதல்வர் கூறுகிறார். அது சட்டரீதியான நடவடிக்கை. அதை தேர்தல் அறிக்கை என்று எப்படி முதல்வர் கூறமுடியும். சயன் வழக்கில் முன்பிலிருந்தே திமுகவும் திமுக வழக்கறிஞர்களும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக, குற்றவாளிகளுக்கு பாதுகாப்பாக திமுக செயல்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் முறையான அனுமதி பெறாமலேயே அரசின் நிர்பந்தம் காரணமாக மீண்டும் சயனை அழைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சாட்சியெல்லாம் விசாரிக்கப்பட்ட பிறகு, மறுவிசாரணை வேண்டும் என முதல்வர் கூறுகிறார். குறுக்கு வழியில் இந்த வழக்கை ஜோடித்து மக்களை திசை திருப்ப ஸ்டாலின் முயற்சிக்கிறார். ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்வேன் என்றார்கள். சட்டமன்றத்தில் இதை கேட்டேன். அது என்ன ஆச்சு... அதற்கு பதில் சொல்லுங்கள் என்றேன். கடந்த ஆண்டு என்ன இருந்ததோ... அது தான் இப்போதும் என்கிறார். தேர்தல் அறிக்கையில் அப்படி இல்லையே. முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என்றாரே. வேண்டுமென்றே பொய்யான வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தார்கள். 


பத்திரிக்கை சுதந்திரம் பற்றி பேசிவிட்டு, நமது அம்மா நாளிதழ் மீது சோதனை நடத்தி, அடுத்தநாள் வரவேண்டிய நாளிதழை தடுத்தது ஸ்டாலின். முதல்வர், நீதிமன்றத்தில் அனுமதி வாங்கி சயனிடம் விசாரணை நடத்துவாக கூறுகிறார். எந்த நீதிமன்றத்தில் அனுமதி வாங்கினார் என்று கூறவேண்டும். கொரோனா பரவலை கட்டுப்படுத்த முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. அதில் கவனம் செலுத்தவில்லை. 26..2.2021 வரை 421 பேர் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். திமுக வந்த பிறகு 1500க்கு குறையாமல் தொடர்ந்து உள்ளது. சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விடுவோரை, இணை நோயால் இறந்ததாக பொய்யான தகவல்களை வெளியில் பரப்புகின்றனர். சோதனையும், வேதனையும் இந்த 100 நாளில் திமுக செய்தது என்று பேசினார்.


அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.