தமிழகத்திற்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறும் அதே வேளையில், புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் கூட்டணி வைத்து, தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து போட்டியிடுகின்றனர்.


இந்த நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான ரங்கசாமி இந்த தேர்தலில் ஏனாம் மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதிகளில் போட்டியிடுகிறார். அவர் போட்டியிடும்  ஏனாம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் துர்கா பிரசாத் பொம்மாடி என்பவரும் போட்டியிடுகிறார்.




இந்த நிலையில், துர்கா பிரசாத் பொம்மாடி கடந்த 1-ந் தேதி முதல் திடீரென காணவில்லை. இதையடுத்து, போலீசார் அவரை தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். இந்த நிலையில்,இன்று காலை ஏனாம் பகுதியில் உள்ள கோதாவரி ஆற்றில் மயங்கிய நிலையில் ஒருவர் கிடப்பதை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.


அங்கு சென்று பார்த்தபோது, காயங்களுடன் துர்கா பிரசாத்பொம்மாடி இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர், அவரை உடனடியாக மீட்டு ஏனாம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.மேலும், அவரிடம் யாரேனும் கடத்திச் சென்றனரா? எப்படி காயங்கள் ஏற்பட்டது? என்றும் விசாரித்து வருகின்றனர்.