முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின், அதிமுகவின் அடுத்த தலைமை யார் என்கிற போட்டி, போட்டா போட்டியாக நடந்தது. ஓபிஎஸ்-சசிகலா என்கிற பிரச்சனை, பின்னர் ஓபிஎஸ்,இபிஎஸ்-சசிகலா என்று மாறியது. இடையிடையே பலர் அதிமுக தலைமைக்கு எதிராக போர் கொடி தூக்கினர். பல்வேறு மன கசப்புகள் இருந்தாலும், அதிமுகவின் இரட்டை தலைமையாக இபிஎஸ்-ஓபிஎஸ் செயல்பட்டு வந்தனர்.


என்னதான் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் இருந்தாலும், இணை ஒருங்கிணைப்பாளரான இபிஎஸ் கரம் தான், ஆரம்பத்திலிருந்து உயர்ந்து வந்தது. அதற்கு காரணம், அவர் முதல்வராக இருந்ததும், அதன் பின் எதிர்கட்சி தலைவராக தொடர்வதும், இரண்டுக்கும் நடுவே, முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதுமே காரணம். இந்த மூன்று நிலைகளுக்கு இடையே அதிமுக தலைமைகளுக்குள் பல்வேறு முரண்பாடுகள், முட்டல்கள், மோதல்கள் நடந்திருக்கிறது.




இரு தரப்பையும் இரண்டாம் கட்டத்தில் உள்ள தலைவர்கள் சமரசம் செய்வதும் , பின்னர் சேர்த்து வைப்பதுமாய் தான் காலம் கடந்து கொண்டிருந்தது. கட்சியின் ஒவ்வொரு முடிவு எடுக்கும் போதும், அதை யார் அறிவிப்பது, யார் முடிவெடுப்பது , யார் சாய்ஸ் என்கிற போட்டி இருந்து கொண்டே தான் இருந்தது. வேட்பாளர் தேர்வு என்றாலும், இபிஎஸ் சாய்ஸ் யார், ஓபிஎஸ் சாய்ஸ் யார் என்று தான் இருந்தது. கட்சியில் வழிகாட்டு குழு அமைத்தால் கூட, அதிலும் இரு தரப்பிலிருந்தும் பரிந்துரைகள் பெறப்பட்டன. இது ஒரு ஒற்றுமை, சரிபங்கு என்பதை கடந்து, ஒரு மெல்லிய கோஷ்டியை உருவாக்கிக் கொண்டிருந்தது. 


இந்நிலையில் தான், நடந்து முடிந்த ராஜ்யசபா எம்.பி., தேர்தலுக்கான இரு வேட்பாளர்கள் தேர்வில், இபிஎஸ்.,க்கு ஒருவர், ஓபிஎஸ்.,க்கு ஒருவர் என்கிற சரிசம விகிதத்தில் வேட்பாளர் தேர்வு வழங்கப்பட்டது. இபிஎஸ்., எதிர்பார்த்ததைப் போலவே, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை தேர்வு செய்தார். முன்னாள் சட்ட அமைச்சரான அவர், டெல்லி செல்வதால், கட்சியின் சட்ட விவகாரங்களை அவரை வைத்து நகர்த்த முடியும் என்பதால், அவரது தேர்வில் ஒரு நியாயம் இருந்தது. அதே நேரத்தில் ஓபிஎஸ், தனது ஆதரவாளர் என்கிற ஒரே காரணத்திற்காக முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய சேர்மன் தர்மரை எம்.பி.,ஆக தேர்வு செய்தார். 




உண்மையில் இது பலருக்கு வருத்தம். குறிப்பாக, ஓபிஎஸ்., அணியில் இருந்த தென்மாவட்டத்தைத் சேர்ந்த பலருக்கும், முன்னாள் அமைச்சர்களுக்கும் இந்த முடிவில் பெரும் வருத்தம் இருந்தது. கடந்த முறை அமைச்சராக இருந்து, தேர்தலில் தோற்ற எத்தனையோ பேர், ஆளுங்கட்சியால் பழிவாங்கப்படும் சூழலில், அவர்களுக்கு வாய்ப்பளிக்காமல், ஒரு ஊராட்சி ஒன்றியத்தின் தலைவரை எம்.பி., வேட்பாளராக நிறுத்த வேண்டியது ஏன்? என்கிற கேள்வியை எழுப்பியுள்ளனர். 


ஓபிஎஸ்.,யின் இந்த முடிவு, அதிமுக கைவசம் இருந்த ஒரு ஊராட்சி ஒன்றியத்தையும் இழக்கச் செய்ததோடு, அவருக்கான தென்மாவட்ட ஆதரவாளர்கள் வட்டத்தையும் பாதித்தது. ‛தன்னை நம்பினால், அடிமட்டத் தொண்டனுக்கும் வாய்ப்பேன்’ என்று, ஓபிஎஸ் சொல்ல வந்தார். ஆனால், தலைமை பொறுப்பை தொடர, அடிமட்ட தொண்டன் மட்டும் போதாது. அதை அங்கீகரிக்கும் நிர்வாகிகள் ஆதரவும் வேண்டும். அதை வேட்பாளர் தேர்வில் ஓபிஎஸ் இழந்ததே, ஒரே நேரத்தில் அவருக்கு எதிராக ஒற்றைத் தலைமை கோரிக்கை எழ காரணமாக கூறப்படுகிறது. 




இந்த விசயத்தில் இபிஎஸ்., தெரிந்தோ, தெரியாமலோ தப்பிவிட்டார். அவர், அவர் சார்ந்த சமுதாய வேட்பாளரையோ, அல்லது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவரையோ தேர்வு செய்யவில்லை. இதனால், இபிஎஸ் செல்வாக்கு, பரவலானது. ஆதரவும் கூடியது . அது தான், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இபிஎஸ் தலைமையில் ஒற்றைத் தலைமை கேட்கும் அளவிற்கு ஓபிஎஸ்.,க்கு எதிரான காய்நகர்த்தலுக்கும் காரணமானது.