தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் பாஜகவின் முன்னாள் தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா முகமது நபி குறித்து வெறுப்புப் பேச்சு பேசிய விவகாரம் பல வாரங்களைக் கடந்துள்ள நிலையில், தற்போது டைம்ஸ் நவ் தொலைக்காட்சி நெறியாளர் நவிகா குமார் மீது பிறரின் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு வழக்குப் பதிவில் அவர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. 


பாஜகவின் முன்னாள் தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா முகமது நபி குறித்து வெறுப்புப் பேச்சு குறித்து மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த முஸ்லிம் அறிஞர் ஒருவரின் வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. 



இந்த விவகாரத்தில் இதற்கு முன்பு தன் நிலைப்பாட்டைக் கூறிய டைம்ஸ் நவ் தொலைக்காட்சி, நுபுர் ஷர்மாவின் பேச்சுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை எனக் கூறியது. `எங்கள் விவாதங்களில் கலந்துகொள்பவர்கள் தங்கள் கண்ணியத்தையும், பிற பேச்சாளர்கள் குறித்து தவறான வார்த்தைகளையும் பேசுவதில் இருந்து தவிர்க்குமாறு தொடர்ந்து அறிவுறுத்துகிறோம்’ என டைம்ஸ் நவ் சார்பில் கூறப்பட்டிருந்தது. 






தனியார் தொலைக்காட்சி விவாதத்தின் வீடியோ பதிவை ஆல்ட் நியூஸ் செய்தி நிறுவனர் முகமது சுபைர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். மேலும், கடந்த ஜூன் 5 அன்று, பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார் நுபுர் ஷர்மா. 



தனது கருத்துகளுக்காக கொலை மிரட்டல்களை எதிர்கொண்டு வருவதாக நுபுர் ஷர்மா தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு ஆதரவாகப் பதிவிட்ட டைம்ஸ் நவ் தொலைக்காட்சி நெறியாளர் நவிகா குமார், `யாரையும் மிரட்டும் உரிமை யாருக்கும் இல்லை.. நுபுர் ஷர்மாவுக்கு விடுக்கப்படும் கொலை மிரட்டல்கள் ஏற்கத்தக்கவை அல்ல.. ஒரு வளார்ந்த ஜனநாயகமாக விவாதம் என்பது அவசியமானது.. எனினும், அதன் வரம்பை மீறுவது யாருக்கும் உகந்தது அல்ல’ என நவிகா குமார் குறிப்பிட்டுள்ளார். 






நுபுர் ஷர்மா மீது சட்டப்பிரிவுகள் 295ஏ, 153ஏ, 505பி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய இஸ்லாமியர்களுக்கான அமைப்பான ரஸா அகாடமி என்ற நிறுவனத்தின் புகாரின் அடிப்படையில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.