ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தேசிய மாநாடு - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில் ஓமர் அப்துல்லாவின், 10 ஆண்டுகளுக்கு முன்பு பதிவிடப்பட்ட எக்ஸ் பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த பதிவில் என்ன தெரிவித்துள்ளார் என பார்ப்போம்.
ஜம்மு காஷ்மீர் தேர்தல்
ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற முதல் சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு நடைபெற்ற முதல் தேர்தல் போன்ற காரணங்களால், ஜம்மு & காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலானது, மிகுந்த கவனத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.
மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் பதிவாகியுள்ள வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அதில் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி இணைந்த இந்தியா கூட்டணியானது 49 தொகுதிகளிலும், பாஜக 29 தொகுதிகளிலும், மக்கள் ஜனநாயக கட்சி 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஓமர் அப்துல்லா போட்டியிட்ட புட்காம் மற்றும் கந்தர்பால் ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.
ஓமர் அப்துல்லா தோல்வி பதிவு
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் ஒன்றிய பிரதேசத்திற்கான சட்டப்பேரவை தேர்தலில் , இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில் , தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஓமர் அப்துல்லா முதலமைச்சராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியை சந்தித்த பிறகு , ஓமர் அப்துல்லா பதவிட்ட பதிவு ஒன்று, சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டதாவது "அமைதியாக இருங்கள்; ஏனென்றால், நான் மீண்டும் வருவேன்," என்று அவர் X இல் டிசம்பர் 24, 2014 ஆம் ஆண்டு பதிவிட்டிருந்தார்.
தோல்வியின் போது மீண்டும் வருவேன் என தன்னம்பிக்கையோடு தெரிவித்தது, தற்போது அவர் வெற்றியடைந்த போது , வைரலாகி வருகிறது.