அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகேட்ட ஓபிஎஸ் வழக்கு நாளை மதியம் விசாரணை நடைபெறும் என நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தகவல் தெரிவித்துள்ளார். பொதுக்குழு குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை தாக்கல் செய்யவும் ஓபிஎஸ் தரப்புக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


முன்னதாக, வரும் 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவிற்கு தடைகோரி ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் பிற்பகல் 2.15 மணிக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தது. 


இ.பி.எஸ். தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் விஜய் நாராயண், எஸ். ஆர். ராஜகோபால் ஆகியோர் ஆஜராக உள்ளனர். ஓ.பி.எஸ். தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆஜராகினர். ஒ.பி.எஸ். தரப்பு வாதத்தில், ”ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் ஜூலை 11ம் தேதி அடுத்த பொதுக்குழு நடத்தப்படும் என அவைத்தலைவர் அறிவித்தது கட்சி விதிகளுக்கு முரணானது. 


கட்சி விதிகளின்படி பொதுக்குழு, செயற்குழு உள்ளிட்ட எந்த கூட்டங்களை கூட்டுவதாக இருந்தாலும் அதற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் அவசியம். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தவிர வேறு எவருக்கும் பொதுக்குழுவை கூட்ட அதிகாரமில்லை.


 இரு பதவிகளின் அதிகாரத்தை அவைத்தலைவரோ, தலைமைக் கழக நிர்வாகிகளோ பறித்துக் கொள்ள முடியாது. ஒற்றைத் தலைமை கொண்டு வரும் வகையில் ஜூலை 11ல் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வர முயற்சி. அது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். 


 ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு ஜூன் 23ல் நடந்த பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்படாததால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தொடர்ந்து செயல்பட முடியாது எனக் கூறி, இரு பதவிகளின் அதிகாரத்தை தலைமைக் கழக நிர்வாகிகள் பறித்துக் கொள்ள முடியாது


ஜூன் 23 கூட்டத்தில் இரு பதவிகளுக்கும் ஒப்புதல் கோரி எந்த தீர்மானங்களும் இடம்பெறவில்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் ஜூலை 11ல் கூட்டப்படும் பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தனர். 


இதையடுத்து ஓபிஎஸ் தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஆய்வு செய்த பிறகு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்வதாக தெரிவித்தார். 


ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் நாளை நடைபெறும் விசாரணை பொறுத்து அதிமுகவின் பொதுக்குழு நடைபெறுமா அல்லது தள்ளிவைக்கப்படுமா என்று தெரியவரும். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண