அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
கடந்த முறை நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானத்தையும் நிறைவேற்றக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து நடைபெற்ற பொதுக்குழுவில் 23 தீர்மானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் தமிழ்மகன் உசேனை பேரவை தலைவராகவும் தேர்ந்தெடுத்து அறிவித்தது இபிஎஸ் தரப்பு.
இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஒபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளது. இதையடுத்து இதுகுறித்த வழக்கு நாளை விசாரணைக்கு வர இருக்கிறது. இதை எதிர்த்து இபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இபிஎஸ் மற்றும் ஒபிஎஸ் தரப்பு காரசார விவாதங்களை முன்வைத்தது.
அதில், இருபத்தி மூன்று தீர்மானங்களை தவிர வேறு எதையும் நிறைவேற்ற கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு அன்றைய தினம் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்ட அன்றே முடிந்துவிட்டது. இதில் மேற்கொண்டு விசாரிக்க என்ன இருக்கிறது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தற்போதைய சூழலில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என்பது சென்னை உயர் நீதிமன்றத்தின் வரம்புக்குட்பட்ட விவகாரம். அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை எனவும் உச்ச நீதிமன்றம் அதன் கருத்தை தெரிவித்தது.
இதற்கு பதிலளித்த இபிஎஸ் தரப்பு “உத்தரவிற்கு எதிராக நாங்கள் செயல்பட்டதாக எங்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்து நடத்த கூடாது என உத்தரவிட வேண்டும்” என கோரிக்கை வைக்கப்பட்டது.
“இது ஒரு கட்சியின் உள் விவகாரம். இதில் ஒரு குறிப்பிட்ட எல்லை வரை தான் உயர் நீதிமன்றம் தலையிட முடியும். ஆனால் எல்லை மீறி சென்னை உயர் நீதிமன்றம் நடந்து கொண்டுள்ளது. இதில் அவர்களுக்கு எந்தவிதமான அதிகாரமும் எந்த பங்கும் கிடையாது” என இபிஎஸ் தரப்பு திட்டவட்டமாக தெரிவித்தது
இதைத்தொடர்ந்து வாதிட்ட ஓபிஎஸ் தரப்பு “தற்போது உள்ள விதிமுறைகள் படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி என்பது ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும். அதுதான் விதி முறை. ஆனால் அதனை மீறும் வகையில் இரண்டு பதவிகளையும் தூக்கி எறிந்துவிட்டு, ஒருவர் மட்டுமே கட்சியை கைப்பற்ற நினைக்கிறார்” என ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.
“சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு 23 தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்ற வேண்டும், ஆனால் அதனை மீறியுள்ளனர். விதிமுறைகளுக்கு எதிராக யாரேனும் நடந்தால் அதில் நீதிமன்றங்கள் தலையிட முடியும்” என ஓபிஎஸ் தரப்பு விளக்கம் தெரிவித்தது.
உங்கள் கட்சிக்குள் என்ன முடிவெடுக்க வேண்டும்? என்ன தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும்? எதை நிராகரிக்க வேண்டும்? உள்ளிட்டவற்றை எல்லாம் நீதிமன்றம் தலையிட்டு சொல்ல வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களா? என ஓபிஎஸ் தரப்பிற்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
உங்களுக்குள் நட்போ அல்லது பிணக்கோ அதனை நீங்கள் தான் முடிவு செய்து கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் ஜுலை 11 ஆம் தேதி நடைபெறவிருக்கும் அதிமுக பொதுக்குழுவிற்கு தடையில்லை என அதிரடியாக தீர்ப்பை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம். மேலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கும் இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.