அதிமுகவில் தற்போது ஒற்றைத் தலைமை விவகாரம் பூதகரமாக வெடித்து வரும் சூழலில் சென்னையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்பொழுது பேசிய அவர், “எந்த காரணத்திற்காகவும் அதிமுக இரண்டாக உடையக் கூடாது. பேச்சுவார்த்தைக்கு நான் தயார். இன்றைய சூழலில் ஒற்றைத் தலைமை என்பது தேவையில்லை” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “அதிமுகவில் இருந்தும், அதிமுகவின் தொண்டர்களிடம் இருந்தும் என்னை ஓரங்கட்ட முடியாது. பொதுச்செயலாளர் பதவிக்கு வேறு ஒருவரை கொண்டு வருவது ஜெயலலிதாவிற்கு செய்யும் துரோகம். ஒற்றைத் தலைமை விவகாரத்தில் யாரையும் குறிப்பிட்டு நான் நோகடிக்க விரும்பவில்லை” எனவும் தெரிவித்தார்.
அதிமுக பொதுக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் வரும் ஜூன் 23 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் முன்னதாக அக்கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி வந்தனர்.
ஓபிஎஸ் குறித்து அதிமுக அறிக்கை
இந்த ஆலோசனைக் கூட்டம் ஓ.பன்னீர்செல்வம் வருவதற்கு முன்பே முடிவுற்றதாக முன்னதாகக் கூறப்பட்ட நிலையில், இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை வழங்கினார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இன்று (ஜூன்.16) நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் தொண்டர்கள் சிலர் ஒற்றைத் தலைமை வேண்டும் என கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்