புதுச்சேரி மின்சாரத்துறை தனியார்மயமாக்குவதும், கார்ப்பரேட்டுகளிடம் மின் துறையை விடுவதும் பொது மக்களுக்கு பெரும் கேட்டினை விளைவிக்கும் என மதிமுக பொதுச் செயலாளர் கண்டனம் தெரிவித்துள்ளார்.


புதுச்சேரி அரசுக்கு நெருக்கடி


இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுச்சேரியின் மின்சாரத் துறையை தனியார்மயமாக்கும் முயற்சியில் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, புதுச்சேரி அரசுக்கு பல நெருக்கடிகளைக் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொடுத்து வருகிறது. மின்சாரத் துறை என்பது ஒத்திசைவுப் பட்டியலின் (CONCURRENCE LIST) கீழ் வருவதால், மாநில அரசுகளுக்கு இந்தத் துறையில் முழுமையான அதிகாரம் உள்ளது.


இந்தச் சூழலில்தான், நாராயணசாமி தலைமையிலான புதுச்சேரி அரசு, தங்களைக் கலந்து ஆலோசிக்காமல் மின்சாரத் துறையைத் தனியார் மயமாக்க ஒன்றிய அரசு முன்வந்தபோது, அதனை ஏற்க மறுத்து அந்த முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என வற்புறுத்தி அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு புதுச்சேரி சட்டமன்றத்தில் 22.07.2020 அன்று தீர்மானம் நிறைவேற்றியது.


அதன் பின்னரும், யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் பகிர்வு நிறுவனங்கள் (DISCOMS) தனியார்மயமாக்கப்படும் என்று 2020 மே மாதம் அறிவித்து அதற்கான முதல்கட்டப் பணிகளில் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது.


ஆத்ம நிர்பார் பாரத் அபியான்



DISCOMS நிறுவனங்களை மீட்டெடுக்க, “ஆத்ம நிர்பார் பாரத் அபியான்” திட்டத்தின்கீழ் நிதியுதவி அளிக்க அந்நிறுவனங்களை தனியார்மயமாக்க வேண்டும் என்ற நிபந்தனையை ஒன்றிய அரசு விதிக்கிறது. அரசின் தவறான இந்த நடவடிக்கைகள் மக்கள் நலனுக்கு எதிரானது.




புதுச்சேரி அரசில் மின்துறைக்கு 285 ஏக்கர் நிலம் உள்ளது. ஐந்து லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர். 3,500 அரசு ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டுள்ளனர். 35,000 குடிசை வீடுகளுக்கு இலவச மின்சாரம் கிடைக்கிறது. கார்ப்பரேட்டுகளிடம் மின்சாரத் துறையை விடுவது என்பது பொது மக்களுக்கு மாபெரும் கேட்டினையே விளைவிக்கும்.


’பொது மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் கேடு'


இதன்மூலம் தாறுமாறாக மின்கட்டணம் உயரும். வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு மறுக்கப்படும். தொழிலாளர் உரிமைகள் பறிக்கப்படும். எனவே, ஒன்றிய அரசும் புதுச்சேரி மாநில அரசும் இந்த முயற்சியைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.


அரசின் முறைகேடான இந்த நடவடிக்கைகளைக் கண்டித்து மின்துறைப் பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தனியார் மய / கார்ப்பரேசன் மய / எதிர்ப்புப் போராட்டக் குழு மக்களை அணிதிரட்டி அறப்போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. அனைத்துக் கட்சியினரும் அவர்களுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் அவர்களுக்கு ஆதரவு அளிக்கிறது.


மின்துறையைத் தனியார்மயமாக்க முயற்சிக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கையை மிகவும் வன்மையாகக் கண்டிப்பதுடன், அந்த முயற்சியைக் கைவிட வேண்டும் என்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.